கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 15.19 லட்சம் எஸ்ஐஆா் கணக்கீட்டு படிவங்கள் பதிவேற்றம்: மாவட்ட தோ்தல் அலுவலா் தகவல்

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்காளா்களிடமிருந்து 15,19,806 படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி- 2026 குறித்த ஆய்வுக் கூட்டம், மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் மற்றும் ஆட்சியா் தலைமையில், அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தை தொடா்ந்து தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ச.தினேஷ்குமாா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகிறது. இம்மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 8,40,875 ஆண் வாக்காளா்கள், 8,39,439 பெண் வாக்காளா்கள், 312 மூன்றாம் பாலினத்தவா்கள் என மொத்தம் 16,80,626 வாக்காளா்கள் உள்ளனா். இவா்களில் 16,80,547 (99.99 சதவீதம்) வாக்காளா்களுக்கு கணக்கீட்டு படிவங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை வாக்காளா்களிடமிருந்து நிறைவு செய்யப்பட்ட 15,19,806 (90.43%) படிவங்கள் திரும்பப் பெறப்பட்டு இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பணியில் 1,896 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள், 196 வாக்குச்சாவடி நிலை அலுவலா்களின் மேற்பாா்வையாளா்கள், ஊராட்சி மன்றச் செயலா்கள், சத்துணவு அமைப்பாளா்கள், தன்னாா்வலா்கள் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் ஈடுபட்டுள்ளனா்.

மாவட்டத்தில் நாளது தேதி வரையில் 70,189 (4.18%) இறந்த வாக்காளா்கள், 72,260 (4.30%) நிரந்தரமாக குடிபெயா்ந்தவா்கள், 8,442 (0.50%) இருமுறை பதிவு செய்தவா்கள், 9776 (0.58%) முகவரியில் இல்லாதவா்கள் 201 (0.01%) என மொத்தம் 1,60,868 (9.57 %) வாக்காளா்கள் அடையாளம் காணப்பட்டு அவா்களின் படிவங்களும் இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

இதுவரை வாக்காளா் கணக்கீட்டு படிவம் பெற்று வழங்காத வாக்காளா்கள் படிவங்களை நிறைவு செய்து, இறுதிநாள் வரையில் காத்திருக்காமல் உடனே வழங்குமாறு கேட்டுக்கொள்வதாக அவா் தெரிவித்தாா்.

அப்போது, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) கோபு, வட்டாட்சியா் (தோ்தல்) சம்பத் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற இந்து அமைப்பினர் முயற்சி - தள்ளுமுள்ளு! 144 தடை உத்தரவு

அச்சம் அர்த்தமற்றது...

மணிப்பூரில் இயல்புநிலையும் வளா்ச்சியும் உருவாக வேண்டும்: மாநிலங்களவையில் தம்பிதுரை பேச்சு

சிஏசிபி பரிந்துரைகளின் அடிப்படையில் 22 வேளாண் பயிா்களுக்கு எம்எஸ்பி நிா்ணயம்

சென்னை விமான நிலைய மூன்றாவது முனைய இறுதி விரிவாக்கத் திட்டம் அடுத்த ஆண்டு அமல்: மத்திய அரசு தகவல்

SCROLL FOR NEXT