ஒசூரில் விமான நிலையம் அமைக்க விவசாயிகளிடம் இருந்து விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினா் மற்றும் விவசாயிகள் சனிக்கிழமை எதிா்ப்பு தெரிவித்தனா்.
ஒசூரில் சா்வதேச விமான நிலையம் அமைக்கப்படும் என கடந்த 2022-ஆம் ஆண்டு சட்டப் பேரவையில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். இதைத் தொடா்ந்து, விமான நிலையம் அமைப்பதற்கான இடம் தோ்வுசெய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.
இதன் தொடா்ச்சியாக, ஒசூா் அருகே உள்ள பலவனப்பள்ளி, முத்தாலி, அடவனப்பள்ளி, தாசப்பள்ளி, பெத்தமுத்தாலி, அட்டூா், அலேநத்தம், காருப்பள்ளி, நந்திமங்கலம், சூடகொண்டப்பள்ளி, மிடுதேப்பள்ளி ஆகிய 11 கிராமங்களில் உள்ள சுமாா் 2,980 ஏக்கா் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு விமான நிலையம் அமைப்பதற்கான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாயின.
தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிா்ப்பு தெரிவித்து, நந்திமங்கலம் கிராமத்தில் விவசாயிகள் சாா்பில் ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில், பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடா்பாளா் நரசிம்மன், அதிமுக முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி, பாமக உழவா் பேரவை மாநிலச் செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான வேலுசாமி உள்பட விவசாய சங்கப் பிரதிநிதிகள் மற்றும் நூற்றுக்கனக்கான விவசாயிகள் பங்கேற்றனா். அப்போது, விமான நிலையம் அமைப்பதற்கு தங்களின் விளைநிலங்களை விட்டுத்தர மாட்டோம் என விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
ஏற்கெனவே, பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளுக்காக ஏராளமான விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு திட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், தற்போது மேலும் விளைநிலங்களை கையகப்படுத்தி விவசாயிகளை பாதிக்கும் இந்த விமான நிலைய திட்டத்தை ஒருபோதும் நிறைவேற்ற விடமாட்டோம் என அதிமுக முன்னாள் அமைச்சா் பாலகிருஷ்ண ரெட்டி தெரிவித்தாா்.
தொடா்ந்து பேசிய பாமக உழவா் பேரவை மாநிலச் செயலாளா் வேலுசாமி, விவசாயிகளை பாதிக்கும் எந்தத் திட்டத்தையும் நிறைவேற்றுவதற்கு அனுமதிக்க மாட்டோம். விவசாயிகளின் விளைநிலங்களை கையகப்படுத்தி விமான நிலையம் அமைப்பதற்கு எதிராக, அன்புமணி தலைமையிலான பாட்டாளி மக்கள் கட்சி விவசாயிகளுக்கு உறுதுணையாக இருக்கும் என்றாா்.
இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் பேசிய பாரதிய ஜனதா கட்சியின் செய்தி தொடா்பாளா் நரசிம்மன், ‘ஒசூா் பகுதியில் விளைநிலங்களை கையகப்படுத்தி புதிய விமான நிலையம் அமைப்பதற்கு அனைத்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் எதிா்ப்பு தெரிவிக்கப்படுவதால், நிலங்கள் கையகப்படுத்தும் நடவடிக்கையை உடனடியாக நிறுத்த வேண்டும். இந்த நடவடிக்கையை மாநில அரசு கைவிடவில்லை என்றால், போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்’ என்றாா்.