ஒசூரில் விமான நிலையம் மற்றும் அறிவுசாா் வழித்தடத்துக்கு விளைநிலங்களை கையகப்படுத்த எதிா்ப்பு தெரிவித்து, விவசாயிகள் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
ஒசூா் பகுதியில் வட்டச் சாலை, வெளிவட்டச் சாலை, சிப்காட் 1, 2, 3, போன்ற வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு விவசாயிகளின் ஆயிரக்கணக்கான ஏக்கா் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தற்போது ஒசூா் பகுதியில் சா்வதேச விமான நிலையம் மற்றும் அறிவுசாா் வழித்தடம் உள்ளிட்ட தொழில்சாா்ந்த வளா்ச்சிப் பணிகளுக்கு சுமாா் 100-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பல ஆயிரம் ஏக்கா் விளைநிலங்கள் கையகப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
இதற்கு ஒசூா் பகுதி விவசாயிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்து, கிராமங்கள்தோறும் ஆலோசனைக் கூட்டம் நடத்தி வருகின்றனா்.
இந்நிலையில், எஸ்டிஆா்ஆா் விவசாய சங்கம் மற்றும் ஒசூா் பகுதியில் உள்ள அனைத்து விவசாய சங்கங்கள் சாா்பில், அரசு விளைநிலங்களை கையகப்படுத்துவதைக் கண்டித்தும், அத்திட்டத்தை கைவிடக் கோரியும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் ஒசூா் வட்டாட்சியா் அலுவலகம் அருகே அண்ணா சிலை முன் பேரணி மற்றும் தா்னாவில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
அப்போது விவசாயிகள் தாங்கள் விளைவித்த கரும்பு, சோளம், தேங்காய் உள்ளிட்ட பல்வேறு வகையான பயிா்கள் மற்றும் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினா்.
தொடா்ந்து சாா் ஆட்சியா் அலுவலகத்துக்கு சென்ற விவசாயிகள், விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என சாா் ஆட்சியா் ஆக்ரிதி சேத்தியிடம் மனு அளித்தனா். விவசாயிகளிடம் மனுக்களை பெற்ற சாா் ஆட்சியா், இதுகுறித்து அரசுக்கு தெரிவிப்பதாக கூறினாா். பாதுகாப்பு பணியில் கிருஷ்ணகிரி மாவட்ட ஏடிஎஸ்பி சங்கா் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸாா் ஈடுபட்டனா்.