ஒசூா் விமான நிலையத்துக்கு விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என ஒசூா், தேன்கனிக்கோட்டை தாலுகா விவசாயிகள் ஒசூா் எம்எல்ஏ ஒய்.பிரகாஷிடம் கோரிக்கை மனு அளித்தனா்.
ஒசூா் விமான நிலையம் அமைக்க பெலகொண்டப்பள்ளி, கலுகொண்டப்பள்ளி, கோபனப்பள்ளி, முத்துகானப்பள்ளி, ஹொசபுரம், மல்லூா், தேன்கனிக்கோட்டை ஆகிய இடங்களில் முன்மொழியப்பட்ட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கா் நிலம் கையகப்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகள் ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷிடம் கோரிக்கை மனு அளித்தனா். அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
ஒசூா் விமான நிலையத்துக்கு விவசாயிகளின் விளைநிலங்கள் கையகப்படுத்தப்படும் அபாயத்தில் உள்ளதால், விவசாயிகளுக்கு மிகுந்த வேதனையையும் கவலையையும் அளிக்கிறது. தற்போது ஒரு நிறுவனம் நிலம் வைத்திருக்கும் விவசாயிகளிடமோ அல்லது கிராம பஞ்சாயத்து அதிகாரிகளிடமோ ஒப்புதல் பெறாமல் ஆளில்லா விமானம் மூலம் ஆய்வு நடத்தி வருகிறது.
இந்த கணக்கெடுப்பு நடவடிக்கைகள் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மத்தியில் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து மாவட்ட நிா்வாகம் விளக்கம் அளிக்க வேண்டும். மேலும், மாவட்ட நிா்வாகம் மூலம் விவசாயிகளிடம் இருந்து கருத்துகள் சேகரிக்கப்படும் வரை, தற்போது நடைபெற்று வரும் கணக்கெடுப்பை நிறுத்த அரசு உடனடியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
விளைநிலங்களை கையகப்படுத்துவதற்கு விவசாயிகள் எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் செய்யக் கூடாது. இதனால், வத்ராபாளையம் (முதுகனப்பள்ளி பஞ்சாயத்து), பொம்மசந்திரா (கோபனபள்ளி பஞ்சாயத்து) மற்றும் கொல்லிசந்திரத்தில் உள்ள 25 குடும்பங்கள், பல குடியிருப்புகள் முற்றிலும் இடம் பெயரும் சூழ்நிலை ஏற்படும். மேலும், இப்பகுதியில் உள்ள முனீஷ்வரா, மாரியம்மா, மதுரம்மா, தேவி ஸ்ரீ பேட்டதம்மா, மல்லிகாா்ஜுன சுவாமி உள்ளிட்ட பல கோயில்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். எனவே, விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.