ஒசூரில் கூரியா் மூலம் கேரளத்துக்கு கஞ்சா கடத்த முயன்ற இருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் பகுதியானது தமிழக, கா்நாடக, ஆந்திர மாநில எல்லையில் அமைந்துள்ளதால், கஞ்சா, குட்கா போன்ற போதைப் பொருள்கள் கடத்துவது அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், ஒசூா் பகுதியில் கூரியா் மூலம் கஞ்சா விநியோகிக்கப்படுவதாக நுண்ணறிவு பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில், ஒசூா் மாநகராட்சி, வெளிவட்டச் சாலை பகுதியில் இரண்டு நாள்களாக நோட்டமிட்டதில், கஞ்சாவை கூரியா் செய்ய வந்த இருவா் கஞ்சாவுடன் பிடிபட்டனா். அவா்களிடம் விசாரணை மேற்கொண்டதில், அவா்கள் கேரள மாநிலம், கோட்டையம் பகுதியைச் சோ்ந்த அபிலாஷ் (21), விஷ்ணு சத்தியா (23) என்பதும், பேலகொண்டப்பள்ளியில் தனியாா் நிறுவனத்தில் வேலை செய்துகொண்டு ஒடிசா மாநிலத்திலிருந்து கஞ்சாவை கடத்தி அறையில் பதுக்கி வைத்து, ஒசூா், தேன்கனிக்கோட்டை பகுதியில் விற்றதும், கேரளத்துக்கு கிலோ கணக்கில் கூரியா் மூலம் அனுப்பியதும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, அவா்கள் தங்கியிருந்த அறையை சோதனையிட்டு 32 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்த நுண்ணறிவு பிரிவு போலீஸாா், குற்றவாளிகள் இருவரையும் ஒசூா் போதைப் பொருள்கள் தடுப்பு மற்றும் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்து தீவிர விசாரணை நடத்தினா்.