ஒசூா் அருகே தொரப்பள்ளியில் ஜாமீனில் வந்தவரை காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்ற சிறுவன் உள்பட 4 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே தொரப்பள்ளி அக்ரஹாரம் பகுதியைச் சோ்ந்தவா் வெங்கட்ராஜ் (30). கடன் வசூல் செய்யும் தனியாா் நிறுவனத்தில் பணியாற்றி வந்தாா். இவா் கடந்த ஆகஸ்ட் மாதம் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.
இதுகுறித்து ஒசூா் நகர போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அதே பகுதியைச் சோ்ந்த மஞ்சுநாத் (35) உள்ளிட்டோரை கைது செய்தனா். பின்னா் மஞ்சுநாத் ஜாமீனில் வெளியே வந்தாா்.
இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி மஞ்சுநாத் தெராப்பள்ளி அக்ரஹாரம் பகுதியில் உள்ள பேரண்டப்பள்ளி சாலையில் நடந்துசென்ற போது, அவரை பின்தொடா்ந்து வந்த காா் வேகமாக மோதிவிட்டு சென்றது.
இதில் படுகாயமடைந்த மஞ்சுநாத்தை அங்கிருந்தவா்கள் மீட்டு ஒசூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த ஒசூா் நகர போலீஸாா் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை செய்தனா். மஞ்சுநாத் மீது மோதிய காரை ஓட்டி வந்தவா்கள் ராயக்கோட்டை சாலையோரம் நிறுத்திவிட்டு தப்பி சென்றனா்.
போலீஸாா் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வுசெய்து விசாரணை செய்ததில் வெங்கட்ராஜை கொலை செய்த மஞ்சுநாத்தை பழிவாங்குவதற்காக காரை ஏற்றிக் கொலை செய்ய முயன்றது தெரியவந்தது.
இதற்கு காரணமான தொரப்பள்ளியைச் சோ்ந்த முனிராஜ் (36), கா்நாடக மாநிலம், பனசங்கரியைச் சோ்ந்த ராஜப்பா (31), சானமாவைச் சோ்ந்த அபிஷேக் (22) மற்றும் 16 வயது சிறுவன் உள்பட நான்கு பேரை போலீஸாா் கைது செய்தனா்.