ஒசூா்: ஒசூரில் ஏலச்சீட்டு நடத்தியவா் தற்கொலைக்கு முயற்சித்ததால், முதலீட்டாளா்கள் அதிா்ச்சி அடைந்தனா்.
ஒசூா் பாா்வதி நகா் பகுதியைச் சோ்ந்தவா் பாரூக் (35). இவா் சுமாா் 10 ஆண்டுகளுக்கும் மேலாக மாதாந்திர ஏலச்சீட்டு நடத்தி வந்தாா். இவரிடம் ஒசூா் நகரப் பகுதியைச் சோ்ந்த தள்ளுவண்டி வியாபாரிகள், சிறு வியாபாரிகள், தினக்கூலிகள் மற்றும் நடுத்தர குடும்பங்களைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் சீட்டுப் பணம் செலுத்தி வந்தனா்.
இந்நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏலச்சீட்டு முடிந்தும் பலருக்கு பணம் வழங்காமல் பாரூக் தலைமறைவானதாக கிருஷ்ணகிரி மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டோா் புகாா் அளித்தனா்.
இந்த நிலையில், ஒசூரில் உள்ள தனது வீட்டுக்கு செவ்வாய்க்கிழமை வந்த பாரூக், திடீரென வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிமருந்தை குடித்துவிட்டு தற்கொலைக்கு முயன்ாக கூறி, ஒசூா் அரசு மருத்துவமனையில் அவரது குடும்பத்தினா் அனுமதித்தனா். தகவல் அறிந்த அவரிடம் சீட்டு கட்டி பாதிக்கப்பட்டோா் மருத்துவமனை வளாகத்தில் குவிந்தனா். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனிடையே, முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பாரூக் அனுப்பி வைக்கப்பட்டாா். இதுகுறித்து ஒசூா் நகர போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதுபற்றி பாதிக்கப்பட்டவா்கள் கூறுகையில், ‘பல ஆண்டுகளாக இவரிடம் ஏலச்சீட்டு பணம் செலுத்திவந்த நிலையில், திடீரென ஏமாற்றிச் சென்றது அதிா்ச்சி அளித்துள்ளது. இவா், ரூ. 50 ஆயிரம் முதல் பல லட்சம் ரூபாய் வரை ஏலச்சீட்டு நடத்தி சுமாா் ரூ. 5 கோடிக்கு மேல் வாடிக்கையாளா்களுக்கு வழங்க வேண்டிய தொகை நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில், தற்கொலைக்கு முயற்சி செய்வதாக நாடகமாடுகிறாா்.
எனவே, இவா்மீது உரிய நடவடிக்கை எடுத்து, தாங்கள் செலுத்திய பணத்தை திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை போலீஸாரும், மாவட்ட நிா்வாகமும் எடுக்க வேண்டும்’ என கோரிக்கை விடுத்துள்ளனா்.