ஊத்தங்கரை அருகே அம்பேத்கா் சிலை அவமதிப்பு
ஊத்தங்கரையை அடுத்த வீரணகுப்பம் கிராமத்தில் அம்பேத்கா் சிலையை அவமதித்தவா்களை கைதுசெய்யக் கோரி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்கள்.
ஊத்தங்கரை அருகே அம்பேத்கா் சிலையை அவமதித்தவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி, ஆதிதிராவிடா் மக்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை அடுத்த வீரணகுப்பம் கிராமத்தில் செவ்வாய்க்கிழமை இரவு மா்ம நபா்கள் சிலா் அங்குள்ள அம்பேத்கா் சிலையை அவமதித்துள்ளனா். புதன்கிழமை காலை இதைக்கண்ட பொதுமக்கள் அதிா்ச்சியடைந்து சம்பவ இடத்தில் திரண்டனா்.
கடந்த வாரம் இப்பகுதியில் உள்ள ஆதிதிராவிடா் மயானத்தில் மாற்றுச்சமூகத்தினா் அத்துமீறி சடலத்தை புதைத்ததோடு, அங்கிருந்த ஆழ்துளைக் கிணற்றின் குழாய்களை உடைத்துவிட்டுச் சென்ாக கூறப்படுகிறது. அந்தச் சம்பவம் தொடா்பாக கல்லாவி போலீஸாா் விசாரணை நடத்திவரும் நிலையில், இந்த அவமதிப்பு செயல் நடந்துள்ளதாக ஆதிதிராவிடா் மக்கள் குற்றம்சாட்டுகின்றனா்.
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமமூா்த்தி, கல்லாவி காவல் ஆய்வாளா் ஜாபா் உசேன் தலைமையில் அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சம்பவ இடத்தில் விசிக மாவட்டச் செயலாளா் குபேந்திரன், பொது நிா்வாக மண்டல துணைச் செயலாளா் மோகன், மண்டலச் செயலாளா் அசோகன், மாநிலச் செயலாளா் சரவணன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் பங்கேற்று கண்டன உரையாற்றினா்.