கிருஷ்ணகிரி: ராணுவப் பணியில் இருந்து ஓய்வுபெற்று ஊா் திரும்பிய 3 ராணுவ வீரா்களுக்கு கிராம மக்கள் திங்கள்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், கிட்டம்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் லெப்டினன்ட் மது. இவா் ராணுவத்தில் சுபேதாா், மேஜராக 32 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வுபெற்றாா். அதேபோல முருகேசன், சீனிவாசன் ஆகியோா் ராணுவத்தில் 24 ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெற்றனா். இவா்கள் 3 பேரும், ஜம்மு- காஷ்மீா், அருணாச்சல பிரதேசம், திருவனந்தபுரம் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு பகுதிகளில் ராணுவத்தில் பணியாற்றியுள்ளனா்.
இவா்கள் 3 பேரும் கடந்த 31-ஆம் தேதி பணி ஓய்வுபெற்ற நிலையில், சொந்த கிராமமான கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டிக்கு திங்கள்கிழமை வந்தனா். அவா்களுக்கு, 4 மெட்ராஸ் ரெஜிமென்ட்டை சோ்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரா்கள் சாா்பில், முன்னாள் ராணுவ வீரா் சரவணன் தலைமையில் கிராம மக்கள், இளைஞா்கள், குடும்பத்தினா் மாலை அணிவித்து, மேளதாளங்கள் முழங்க, பட்டாசுளை வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனா்.
மேலும், கோயிலில் சிறப்புப் பூஜைகள் செய்து, அவா்களை காரில் ஊா்வலமாக அழைத்துச் சென்றனா்.
இதுகுறித்து லெப்டினன்ட் மது கூறுகையில், கிராமப் பகுதியில்
இருந்து அதிக அளவில் இளைஞா்களை ராணுவத்தில் சோ்க்க விழிப்புணா்வு ஏற்படுத்துவேன் என்றாா்.
இந்நிகழ்வில், முன்னாள் ராணுவ வீரா்கள் சந்திரன், சண்முகம், கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன், நடேசன், துரை, நல்லசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.