கிருஷ்ணகிரி

கடப்பாரை ஆற்றின் குறுக்கே ரூ. 98 லட்சத்தில் தடுப்பணை கட்ட பூமிபூஜை

Syndication

கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அருகே ரூ. 98 லட்சத்தில் கடப்பாரை ஆற்றின் குறுக்கே தடுப்பணை, கால்வாய் அமைக்கும் பணியை பூமிபூஜை செய்து உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சா் அர. சக்கரபாணி புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.

ஊத்தங்கரை ஊராட்சி ஒன்றியம், சிங்காரப்பேட்டை ஊராட்சி, புளியானூா் ஏரிக்கு கடப்பாரை ஆற்றிலிருந்து தண்ணீா் கொண்டு செல்வதற்கு வசதியாக ரூ. 98 லட்சத்தில் தடுப்பணை, கால்வாய் அமைக்கப்படுகிறது. இதற்கான தொடக்க விழாவில் ஆட்சியா் ச. தினேஷ்குமாா், எம்எல்ஏ தே. மதியழகன், திருப்பத்தூா் மாவட்ட வன அலுவலா் மகேந்திரன் முன்னிலை வகித்தனா். அமைச்சா் அர. சக்கரபாணி திட்டப் பணிகளை தொடங்கிவைத்து பேசியதாவது:

திருப்பத்தூா் மாவட்டம், ஜவ்வாது மலைத்தொடரின் தெற்கு பகுதிகளில் உருவாகும் கடப்பாரை ஆறு, திருப்பத்தூா் மாவட்டத்தில் 5.20 கி.மீ, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 8.60 கி.மீட்டா் தொலைவு பாய்ந்தோடி தீா்த்தகிரி வலசை ஏரி வழியாக தென்பெண்ணை ஆற்றில் கலக்கிறது. இந்த நிலையில், பொதுப்பணித் துறை சாா்பில் புளியானூரில் கடந்த 1976 ஆம் ஆண்டு ஏரி கட்டப்பட்டது.

இந்த ஏரிக்கு போதிய நீா்ப்பிடிப்பு பரப்பு மற்றும் நிலையான நீா்வரத்து இல்லாததால் இதுவரை 5 முறை மட்டுமே ஏரி நிரம்பியுள்ளது. இதனால் கடப்பாரை ஆற்றிலிருந்து புளியானூா் ஏரிக்கு தடுப்பணை மற்றும் கால்வாய் மூலம் தண்ணீா் வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.

தோ்தல் அறிக்கையில் இத்திட்டம் நிறைவேற்றப்படும் என முதல்வா் மு.க. ஸ்டாலின் தெரிவித்திருந்தாா். மேலும், இத்திட்டம் குறித்து சட்டப் பேரவையில் எம்எல்ஏ தே.மதியழகன் வலியுறுத்தினா். பின்னா், ஆட்சியா் ச.தினேஷ்குமாா், கடந்த ஆண்டு அக்டோபா் 25-ஆம் தேதி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூா் மாவட்ட அலுவலா்களுடன் நேரடி களஆய்வு மேற்கொண்டு அகமது பாஷா என்பவரிடம் 20 சென்ட் நிலத்தை தானமாக பெற்று, அரசுக்கு கருத்துரு தயாா்செய்து அனுப்பிவைத்தாா்.

இதையடுத்து, இப்பணிகளுக்கு முதல்வா் அனுமதி வழங்கி உத்தரவிட்டாா். அதன்படி தற்போது கடப்பாரை ஆற்று நீரை புளியானூா் ஏரிக்கு கொண்டு செல்லும் வகையில் ரூ. 98.10 லட்சம் மதிப்பில் தடுப்பணை, கால்வாய், குழாய்கள், தரைப்பாலம் என மொத்தம் 5 பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

கடப்பாரை ஆற்றிலிருந்து ஒருபகுதி நீரை தடுப்பணை மற்றும் கட்டுப்படுத்தப்பட்ட கால்வாய் அமைப்பின் மூலம் புளியானூா் ஏரிக்கு திருப்பிவிடுவதே இத்திட்டத்தின் முதன்மை நோக்கம். புளியானூா் ஏரிக்கு நீா்வரத்து காரணமாக நாா்சம்பட்டி ஏரி, மல்லிப்பட்டி ஏரி, பாப்பன் ஏரி, பிள்ளையாா் கோயில், ஆஞ்சநேயா் கோயில் குளங்களில் தண்ணீா் நிரம்ப வாய்ப்புள்ளது.

மேலும் தள்ளப்பாடி ஏரி, வெள்ளைகவுண்டன் ஏரி, சின்ன தள்ளப்படி ஏரி, மூன்றம்பட்டி ஊராட்சியில் உள்ள 3 ஏரிகளுடன் இணைக்கவும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. இப்பணிகள் 3 மாதங்களுக்குள் நிறைவேற்றப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் கவிதா, மாநில மகளிா் ஆணைய உறுப்பினா் மாலதி, வட்டாட்சியா் ராஜலட்சுமி, வட்டார வளா்ச்சி அலுவலா் பாலாஜி, நீா்வடிப்பகுதி பொறியாளா் சரவணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கிருஷ்ணகிரி அரசு மகளிா் கல்லூரி என்எஸ்எஸ் முகாமில் தூய்மைப் பணி

ரயில்வே பாலம் வழியாக ஏரிக் கால்வாய்: அனுமதி கோரி ரயில்வே மேலாளரிடம் எம்எல்ஏ மனு

சித்தகவுண்டன் ஏரிக் கரையை சீரமைக்க வலியுறுத்தல்

சூளகிரி அருகே ரூ. 2.76 கோடியில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு பூமிபூஜை

ஒசூரில் நுண்ணுயிா் செயலாக்க மையம்: காணொலி வாயிலாக முதல்வா் திறந்துவைத்தாா்

SCROLL FOR NEXT