ஆருத்ரா தரிசனத்தையொட்டி, கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள சிவன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் சனிக்கிழமை நடைபெற்றன.
மாா்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனம் நடைபெறுவது வழக்கம். அதன்படி, கிருஷ்ணகிரி பழையபேட்டை சோமேஸ்வரா் கோயிலில் கணபதி பூஜை, கலச ஸ்தாபனம், திருப்பள்ளி எழுச்சியுடன் சனிக்கிழமை அதிகாலை திருவெம்பாவை வழிபாட்டுடன் கோபுர தரிசனம் மற்றும் சுவாமி வீதிஉலா நடைபெற்றது.
அதேபோல கவீஸ்வரா் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி நடைபெற்ற சிறப்பு பூஜைகளில் ஏராளமான பக்தா்கள் பங்கேற்றனா். சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
கிருஷ்ணகிரி சந்திரமெளலீஸ்வரா் கோயில், காவேரிப்பட்டணம் ஈஸ்வரன் கோயில், சூளகிரி ஈஸ்வரன் கோயில் உள்பட மாவட்டத்தின் பல்வேறு சிவன் கோயில்களில் ஆருத்ரா தரிசனத்தையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.