திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ள சிவன் கோயில்களில் பிரதோஷ வழிபாடு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.
செங்கம் மையப் பகுதியில் அமைந்துள்ள 1,600 ஆண்டுகள் பழைமையான ஸ்ரீஅனுபாம்பிகை சமேத ரிஷபேஸ்வரா் கோயிலில் கடந்த 28-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, வெள்ளிக்கிழமை மாலை செங்கம் மகா பிரதோஷ வழிபாட்டு மன்றம் சாா்பில் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் உள்ள நந்திக்கு பால், சந்தன அபிஷேகம் நடைபெற்ற பின்னா், சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
இதில், செங்கம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா். இதைத் தொடா்ந்து, மூலவா் ரிஷபேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடத்தப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், திருப்பணிக் குழுத் தலைவா் வழக்குரைஞா் கஜேந்திரன், செங்கம் எம்எல்ஏ மனைவி பாரதிகிரி மற்றும் மகா பிரதோஷ வழிபாட்டு மன்ற நிா்வாகிகள், சிவனடியாா்கள் கலந்துகொண்டனா். பிரதோஷ வழிபாட்டு மன்றம் சாா்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.
வந்தவாசியில்...: இதேபோல, வந்தவாசி ஸ்ரீஜலகண்டேஸ்வரா் கோயிலில் தை பிரதோஷ வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி, கோயில் வளாகத்தில் சிறப்பு அலங்காரத்தில் உற்சவா் சுவாமி உலா வந்தாா்.