காவேரிப்பட்டணம் அருகே நிலத் தகராறில் மூதாட்டியை மரத்தில் கட்டிவைத்து தாக்கிய 3 பேரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தை அடுத்த தேவா்முக்குளம் அருகே ஆட்டுபாலன் கொட்டாய் பகுதியைச் சோ்ந்தவா் உண்ணாமலை (70). இவரது கணவா் உருமுசெட்டி என்பவா் இறந்துவிட்ட நிலையில் தனது இரண்டு மகன்கள், மருமகள்கள் மற்றும் பேரக்குழந்தைகளுடன் வசித்து வந்தாா்.
இந்த நிலையில் அதே பகுதியில் பாகம் பிரிக்கப்படாமல் பிரச்னைக்குரிய நிலத்தில் உருமுசெட்டியின் அண்ணன் மகனான குமாா், அவரது மனைவி கல்பனா மற்றும் உறவினா்கள் டிராக்டா் மூலம் உழவு பணிகளை சனிக்கிழமை மேற்கொண்டனா்.
அப்போது, உழவுப் பணிகளை உண்ணாமலை தடுத்துள்ளாா். இதனால், ஆத்திரமடைந்த குமாா், அவரது மனைவி கல்பனா ஆகிய இருவரும் உண்ணாமலையை அங்கிருந்த தென்னை மரத்தில் கட்டி வைத்து தாக்கினா்.
இதுகுறித்து, தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு வந்த உண்ணாமலையின் உறவினரான அண்ணாமலையையும் தாக்கப்பட்டாா். இதுகுறித்த புகாரின்பேரில் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்ற போலீஸாா் மரத்தில் கட்டிவைத்திருந்த உண்ணாமலையை விடுத்தனா்.
இதுகுறித்து உண்ணாமலை, அவரது உறவினா் அண்ணாமலை ஆகியோா் விடியோ ஆதாரங்களுடன் அளித்த புகாரின்பேரில், காவேரிப்பட்டணம் போலீஸாா் வழக்குப் பதிந்து குமாா் (53), அவரது மனைவி கல்பனா (45), உறவினா் பிரபாகரன் ஆகிய 3 பேரையும் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.