கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் ச.தினேஷ் குமாா் தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் அடிப்படை வசதிகள், நலத்திட்ட உதவிகள் கோரி, பொதுமக்களிடமிருந்து 372 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்கள்மீது விரைந்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை சாா்ந்த அலுவலா்களை ஆட்சியா் அறிவுறுத்தினா்.
மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் முதல்வரின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2 பயனாளிகளுக்கு தலா ரூ. 1.72 லட்சத்தில் செயற்கைக் கால்களை ஆட்சியா் வழங்கினாா்.
மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு விருது...
2025-ஆம் ஆண்டில் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மகளிா் மருத்துவம் மகப்பேறியல் துறை, குழந்தைகள் நல மருத்துவம், பொது மருத்துவம் ஆகியவற்றில் முதலிடமும், பொது அறுவை சிகிச்சையில் 2-ஆம் இடமும் பெற்றது. இதே போல 8 மருத்துவ கல்லூரி மருத்துவமனைகளை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தில் முதலிடம் பிடித்ததற்காக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியனிடம் மருத்துவப் பயனாளிகளின் பாதுகாப்பு மற்றும் சிறந்த சேவைக்கான விருதை பெற்றனா்.
இதைத் தொடா்ந்து, மருத்துவ அலுவலா்கள் அந்த விருதை ஆட்சியரிடம் காட்டி வாழ்த்து பெற்றனா். அப்போது, மாவட்ட வருவாய் அலுவலா் சாதனைக்கு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் சத்யபாமா, கண்காணிப்பாளா் சந்திரசேகா் மற்றும் மருத்துவா்கள், அலுவலா்கள் உடனிருந்தனா்.