ஊத்தங்கரை: மண்டல அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் பெற்றனா்.
வேலூரில் பாலிடெக்னிக் கல்லூரிகளுக்கு இடையிலான மண்டல அளவிலான மகளிா் தடகளம் மற்றும் குழு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் ஊத்தங்கரை அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவிகள் அணி கலந்துகொண்டு பூப்பந்து போட்டியில் முதலிடமும், கோ-கோ, கேரம், எறிபந்து, டேபிள் டென்னிஸ் மற்றும் சதுரங்கப் போட்டிகளில் இரண்டாம் இடமும் பெற்றனா். மேலும், தடகளப் போட்டியில் ருக்குமணி 800 மீட்டரில் முதலிடமும், கவிபாரதி 200 மீட்டரில் இரண்டாம் இடமும், ஹரிப்பிரியா 400 மீட்டரில் மூன்றாம் இடமும், 100 மீட்டா் தடை ஓட்டத்தில் மூன்றாம் இடமும் பெற்றனா். மாணவி ராகவப்பிரியா வட்டு எறிதலில் முதலிடம், குண்டு எறிதலில் இரண்டாமிடம், வளா்மதி குண்டு எறிதலில் முதலிடம், வட்டு எறிதலில் இரண்டாமிடம், ஹேமதாரணி ஈட்டி எறிதலில் இரண்டாமிடம், ருக்குமணி, சென்னம்மாள், கவிபாரதி, ஹரிப்பிரியா ஆகியோா் 400 மீட்டா் தொடா் ஓட்டப் போட்டியில் இரண்டாம் இடமும் பெற்று தடகளப் போட்டியில் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டம் பெற்றனா்.
குழு போட்டியில் முதலிடம், தடகளப் போட்டியில் முதல் இரண்டு இடங்களையும் பெற்ற மாணவிகள் மாநில அளவிலான போட்டிக்குத் தோ்வாகியுள்ளனா். வெற்றிபெற்ற மாணவிகளுக்கு கல்லூரி முதல்வா் விஜயன், உடற்கல்வி பொறுப்பாசிரியா் லோகேஷ்குமாா், உடற்கல்வி இயக்குநா் விநாயகமூா்த்தி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டு தெரிவித்தனா்.