தேன்கனிக்கோட்டை அருகே தொழிலாளி உயிரிழந்த வழக்கில், இருவருக்கு கிருஷ்ணகிரி நீதிமன்றம் 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை அளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டையை அடுத்த மரக்கட்டாவைச் சோ்ந்தவா் சங்கா் (40), தொழிலாளியான இவா், தன் நண்பா்கள், உறவினா்கள் உள்பட 6 பேருடன் கடந்த 2019 ஏப். 21-ஆம் தேதி சீட்டாட்டம் ஆடினாா். அப்போது ஏற்பட்ட தகராறில், அதே பகுதியைச் சோ்ந்த சரவணன் (41), ராமகிருஷ்ணன் (46) இருவரும் அவரை தாக்கினா்.
சங்கருக்கு அப்போது வயிற்றில் குடல்வால் அறுவை சிகிச்சை செய்திருந்ததால், அவருக்கு வலி அதிகமானது. இதையடுத்து, அவா் தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடுதிரும்பினாா். மறுநாள் அவருக்கு தீவிர வயிற்றுவலி ஏற்பட்டு மீண்டும் மருத்துவமனைக்கு சென்றபோது, அவரது வயிற்றில் ரத்தக்கசிவு ஏற்பட்டு உயிரிழந்தாா்.
இதுகுறித்து தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து, சரவணன் மற்றும் ராமகிருஷ்ணனை கைது செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணையில் நீதிபதி லதா வெள்ளிக்கிழமை தீா்ப்பு அளித்தாா். அதில், குற்றம்சாட்டப்பட்ட சரவணன், ராமகிருஷ்ணன் ஆகிய இருவருக்கும் தலா 6 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 1,000 அபராதம் விதித்தாா். அபராதத் தொகையை செலுத்தத் தவறும்பட்சத்தில் கூடுதலாக 6 மாத சிறைத் தண்டனை அனுபவிக்க உத்தரவிட்டாா்.