விலையில்லா கால்நடைகளை விற்றால் கடும் நடவடிக்கை
தமிழக அரசு வழங்கிய விலையில்லா கால்நடைகளை விற்பவர்கள் மீதும், அவற்றை வாங்கும் இறைச்சிக் கடைக்காரர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜகந்நாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
தமிழக அரசு வழங்கிய விலையில்லா கால்நடைகளை விற்பவர்கள் மீதும், அவற்றை வாங்கும் இறைச்சிக் கடைக்காரர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜகந்நாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த, தமிழக அரசு செயல்படுத்தி வரும் விலையில்லா கறவை மாடுகள், வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், நாமக்கல் மாவட்டத்தில் 2011-2012-ஆம் ஆண்டில் 11,624 ஆடுகள், 100 கறவை மாடுகளும், 2012-2013-இல் 11,824 ஆடுகள், 100 மாடுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, அந்த ஆடுகள் ஈன்ற குட்டிகளின் கணக்கெடுப்புப்படி, மொத்தம் 10,587 குட்டிகளும், 2011-2012-இல் வழங்கப்பட்ட 65 பசுக்கள் மறு கன்று ஈன்றும், 32 பசுக்கள் சினையுற்றும் உள்ளன.
விலையில்லா கறவை மாடுகளை 4 ஆண்டுகள் குறைவின்றி பராமரிக்கவும், ஆடுகளை 2 ஆண்டுகளுக்கு குறைவில்லாமல் பராமரிக்கவும் வேண்டும் என்ற உத்தரவாதத்தின் அடிப்படையிலேயே பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவை வழங்கப்பட்டுள்ளன. இருப்பினும், சில இடங்களில் விலையில்லா ஆடுகளை இறைச்சிக் கடைக்கு விற்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டு அத்தகைய பயனாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதுடன், இழப்பீடும் பெறப்பட்டுள்ளது.
எனவே, பயனாளிகள் இந்தத் திட்டத்தை பயன்படுத்தி வளர்ச்சி அடைந்திடவும், அரசு அறிவித்துள்ள காலக்கெடுவுக்குள் விற்பனை செய்வதை தவிர்த்திடவும் வேண்டும். விதிமுறைகளை மீறி விலையில்லா ஆடுகள், மாடுகளை விற்பனை செய்வோர் மீதும், வாங்கும் இறைச்சிக் கடைக்காரர்கள் மீதும் அரசு விதிப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.