நாமக்கல்

உர மானியத்துக்கு ஆதார் அவசியம்: ஜூன் 1-ஆம் தேதி முதல் அமல்

DIN

விவசாயிகள் உர மானியம் பெற ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை வரும் ஜூன் 1-ஆம் தேதி முதல் அமல்படுத்தபடவுள்ளது.
விவசாயிகளுக்கு உர மானியம் நேரடியாக வழங்கும் திட்டம் குறித்து வேளாண்மை அலுவலர்கள், உர விற்பனையாளர்களுக்கான பயிற்சி முகாம் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆட்சியர் மு.ஆசியா மரியம் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. முகாமைத் தொடங்கிவைத்து ஆட்சியர் பேசியது:
உரமானியம் விவசாயிகளுக்கு நேரடியாகச் சென்றடைய வேண்டும் என்பதற்காக வரும் ஜுன் 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் நேரடி உரமானியம் முறை மத்திய அரசால் அமல்படுத்தப்பட உள்ளது.
இந்த உரங்களுக்கான மானியத் தொகையை மத்திய அரசு உர நிறுவனங்களுக்கு நேரடியாக வழங்கி வந்தது. முதலில் உர விநியோகம் தொடர்பாக உர நிறுவனம் அளிக்கும் தகவல் அடிப்படையிலும், பின்னர் வேளாண்மை துறை அலுவலர்களின் சான்றிதழ்களின் அடிப்படையிலும் சம்மந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்பட்டது.
இந்த நிலையில் உரமானியம் நேரடியாக உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயிகளுக்குச் சென்றடையும் வகையில் நேரடி உர மானிய முறையை மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. சமையல் எரிவாயு மானிய முறையைப்போலவே இந்தத் திட்டம் நாடு முழுவதும் வரும் ஜுன் 1-ஆம் தேதி அமலுக்கு வருகிறது.
இத்திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை தமிழக வேளாண்மைத் துறை தீவிரமாக மேற்கொண்டுள்ளது.
இதன்படி வரும் ஜுன் 1ஆம் தேதி முதல் நாமக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை அளித்து, விரல் ரேகையைப் பதிவு செய்தால் மட்டுமே அவர்களுக்கு மானிய விலையில் உரம் வழங்கப்படும்.
தற்போது நியாயவிலைக் கடைகளில் பயன்பாட்டில் உள்ளதுபோல  பிஓஎஸ் எனப்படும் பாய்ண்ட் ஆப் சேல்ஸ் விற்பனை செயலி கருவிகள் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு வழங்கப்படவுள்ளன. தலா ரூ.27,500 மதிப்புள்ள இந்த கருவியை உர நிறுவனங்கள் விற்பனையாளர்களுக்கு இலவசமாக வழங்குகின்றன.
விவசாயிகள் உரம் வாங்கச் செல்லும்போது, அவர்களது ஆதார் எண் இந்தக் கருவியில் பதிவு செய்யப்பட்டு, விரல் ரேகையைப் பதிவு செய்தால் மட்டுமே மானிய விலையில் உரம் கிடைக்கும்.
கடைகளில் மானியம்: இத்திட்டத்தில் விவசாயிகள் உர விலையை முழுவதுமாகக் கொடுத்து பின்னர் மானியத்தை வங்கியின் மூலம் பெறுவது விடுத்து மானியம்போக மீதி தொகையை மட்டுமே விவசாயிகள் கடைகளில் அளித்தால் போதும். இதற்கு ஆதார் எண் கட்டாயம் இருக்க வேண்டும்.
இந்தத் திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாநிலத்துக்கும் ஒரு உரம் நிறுவனம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் நேரடி உர மானிய முறைக்கான உர நிறுவனமாக ஸ்பிக் நிறுவனம் நியமிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல் மாவட்டத்தில் முதல்கட்டமாக 218 தனியார் உர விற்பனையாளர்களுக்கும் மற்றும் 171 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளர்களுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என்றார்.
ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(வேளாண்மை)ஆர்.சுப்ரமணியம் வரவேற்றார். கூட்டுறவு சங்க இணைப் பதிவாளர் பொ.பாலமுருகன், இத்திட்டத்தின் முக்கியத்துவத்தும் குறித்து பேசினார். வேளாண்மை உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு)எஸ்.சின்னசாமி திட்ட விளக்க உரை ஆற்றினார். பாக்ட் மற்றும் ஸ்பிக் உர நிறுவனத்தை சேர்ந்த அருண்குமார் மற்றும் ராமர் ஆகியோர் பயிற்சி அளித்தனர். வேளாண்மை துணை இயக்குநர்கள் ப.கணேசன் மற்றும் ஆர்.வரதராஜ்,  வேளாண்மை அலுவலர்கள் சி.பாபு, தி.அன்புச்செல்வி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

பஞ்சாபை வீழ்த்தி சிஎஸ்கே அசத்தல்; புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேற்றம்!

SCROLL FOR NEXT