நாமக்கல்

வெப்ப அலைவீச்சு: தோட்டக்கலை பயிர் சாகுபடியில் கையாள வேண்டிய முறைகள்

DIN


நாமக்கல்:  வெப்ப அலைவீச்சு காணப்படுவதால் தோட்டக் கலை பயிர் சாகுபடியின்போது கையாள வேண்டிய முறைகள் குறித்து தோட்டக் கலைத் துறை விவசாயிகளுக்கு விளக்கம் அளித்துள்ளது.
வேர்ப்பகுதி  நீர்ப்பாசன முறை:  பழச்செடிகள் மற்றும் நிழல் தரும் மரவகைகள் புதிதாக நடவு செய்யும்போது, நடவு  குழிகளில் பிவிசி குழாய் மூலம் இரு எதிர் பக்கங்களில் மணல் களம் அமைத்து வேர்ப் பகுதியில் நீர் சென்றடைய வழிவகை செய்வதன் மூலம் வெப்ப அலைவீச்சினால் நீர் வீணாவது தடுக்கப்படுகிறது. மேலும்,     மண்பானையின் அடிப் பாகத்தில் சிறு துளையிட்டு அத்துளையில் சணல் அல்லது பஞ்சினால் திரிக்கப்பட்ட கயிற்றினை சொருகி விட வேண்டும். பானையில் நீரினை நிரப்பி செடிகளின் வேர்ப்பகுதியில் மண்பானை இருக்குமாறு புதைத்து வைக்க வேண்டும். துளை மூலம் ஏற்படும் நீர்க்கசிவினால் நீரானது நேரடியாக வேர்ப் பகுதிக்கு சென்றடைகிறது. மாலை வேளையில் தெளிப்பான் மூலம் இலைப்பகுதி முழுவதிலும்   தண்ணீர் படுமாறு தெளிப்பதன் மூலம் வெப்ப அலை வீச்சினால் இலைவழி நீர் வெளியேற்றம் தடுக்கப்பட்டு, பயிர்கள் ஈரப்பதம் இழப்பதில் இருந்து
தவிர்க்கப்படுகிறது. 
நெகிழி மூடாக்கு: நெகிழி கொண்டு பயன்படுத்தப்படும் இந்த உயரிய தொழில்நுட்பம் தர்ப்பூசணி, வெள்ளரி, தக்காளி, கத்தரி உள்ளிட்ட  பயிர்கள் சாகுபடியில் கடைப்பிடிக்கப்படுகிறது. இம்முறையினால் களைக் கட்டுப்படுத்தப்படுவதுடன், களையினால் ஏற்படும் நீர் சேதாரம் தவிர்க்கப்படுகிறது. மேலும் அதிக சூரியவெப்பத்தினால் ஏற்படும் நீர் இழப்பு முற்றிலும் தவிர்க்கப்பட்டு பயிருக்குத் தேவையான நுண் காலநிலை பாதுகாக்கப்படுகிறது.
தென்னை நார்க் கழிவு மூடாக்கு: தென்னை நார்க் கழிவு மற்றும் துண்டாக்கப்பட்ட மட்டைகள் மூலம் மரத்தின் வேர்ப் பகுதியை சுற்றி மூடாக்கு அமைப்பதன் மூலம் நீர் தேவை வெகுவாகக் குறைக்கப்படுகிறது. வெப்பம் மிகுந்த கோடைக் காலங்களில் இம்முறை மிகுந்த பயனுள்ளதாக அமைகிறது.
நிழல் வலைக் குடில்:  வெயில் மற்றும் வெப்பஅலைகள் அதிகமாக உள்ள காலங்களில் கொத்தமல்லி,  சிறுகீரை போன்ற கீரைகளை வளர்ப்பதற்கு  நிழல் வலைக் குடில் ஒரு உயரிய தொழில் நுட்பமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. 50 மற்றும் 75 சதவீதம் அளவிற்கு சூரியஒளி உட்புகுதல் கட்டுப்படுத்தப்படுவதால் கீரைகள் மற்றும் காய்கறிப் பயிர்கள் சாகுபடி செய்வதற்கு ஏற்ற சூழல் உருவாக்கப்படுகிறது. இலைகள் மற்றும் கிளைகளின் அடர்த்தியைக் குறைத்தல், வளர்ந்த மரங்களில் வெப்ப அலை வீச்சினால் இலை வழி ஏற்படும் நீர் இழப்பைத் தடுக்கும் விதமாக இலைகள் மற்றும் கிளைகளின் அடர்த்தியைக் குறைப்பதன் மூலமும் நீர் இழப்பு தடுக்கப்படுகிறது.
தெளிப்பான்கள்:  இளஞ்சிவப்பு நிறமிகு திறன்மிக்க மெத்திலோட்ரோப்கள் என்று அழைக்கப்படும் நுண்ணுயிர் திரவம் ஏக்கருக்கு  200 மில்லிமீட்டர் நீருடன் கலந்து தெளிப்பதன் மூலம் இலைவழி நீர் ஆவியாதல் தடுக்க இயலும். இவ்வுயிர் திரவம் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் ஒரு லிட்டர் ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது.  2 சதம் டை அம்மோனியம் பாஸ்பேட் மற்றும் ஒரு சதம் பொட்டாசியம் குளோரைடு கலந்து தெளிப்பதன் மூலம்  நீர் ஆவியாதல் தடுக்கப்பட்டு பயிர் வாடல் தவிர்க்கப்படுகிறது.
 மேற்கூறிய முறைகளை தோட்டக்கலை விவசாயிகள் பின்பற்றினால், கோடைக்கால வெப்ப அலை வீச்சினால் ஏற்படும் பயிர் சாகுபடி இழப்பைச் சரி செய்திட முடியும். மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு தங்களது வட்டார தோட்டக்கலை உதவி இயக்குநர் அலுவலகங்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

லாரி மீது கார் மோதி விபத்து: 5 பேர் பலி

முதல்வர் ஸ்டாலின் மே நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT