நாமக்கல்லில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் உலக கொங்கு தமிழர் மாநாடு அரசியல் கட்சியினரிடன் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி மீதான கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் மூலம் இந்த கட்சி தேர்தல் கூட்டணிக்கு பிரதான கட்சிகளிடம் நிபந்தனைகளை விதிக்க முடியும் என நம்புகிறது.
கொங்கு மண்டலத்தில் கடந்த 10 ஆண்டுகளில் கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி என்பது அரசியலில் தனக்கென குறிப்பிடத்தக்க வாக்கு வங்கியை உருவாக்கியுள்ளது. அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளில் உள்ளவர்களை படிப்படியாக ஈர்த்துவந்த இந்தக் கட்சி, இப்போது மகளிர், இளைஞர்களைக் குறிவைத்து அரசியல் நகர்வுகளை மேற்கொண்டு வருகிறது.
2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிட்ட கொ.ம.தே.க. பொதுச் செயலர் ஈ.ஆர்.ஈஸ்வரன் சுமார் 2.75 லட்சம் வாக்குகளைப் பெற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். அதிமுக, திமுக அல்லாத பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றிருந்த அவர், ஏறத்தாழ 3 லட்சம் வாக்குகளைப் பெற்றது, அக் கட்சியினரின் கடினமான களப்பணியாகத்தான் பார்க்கப்படுகிறது.
அதன்பிறகு தான், 2016 சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுக, திமுக ஆகிய இரண்டு கட்சிகளுமே கொ.ம.தே.க.வுடன் கூட்டணிக்கு முயற்சித்தன. கடைசி நேரத்தில் இந்த கட்சி தனித்து போட்டியிட்டது. இதில் கொங்கு மண்டலத்தில் அக் கட்சி நாமக்கல் உள்ளிட்ட சில தொகுதிகளில் 10,000 வாக்குகளுக்கும் கூடுதலாகப் பெற்றது.
கொங்கு மண்டலத்தில் திமுக மிக மோசமான தோல்வியை அடைந்த நிலையில், 20-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் 5,000 வாக்குகளுக்கு குறைவான வித்தியாசத்தில் தான் வெற்றியைப் பறி கொடுத்தது. கொ.ம.தே.க. கூட்டணியில் இருந்திருந்தால், இந்த தொகுதிகளில் திமுக வெற்றிபெற்றிருக்கக் கூடும் என்ற நிலை இருந்தது. சட்டப்பேரவைத் தேர்தலுக்கு பிறகு இப்போது வரை தி.மு.க.வுடன் கொ.ம.தே.க.வின் நட்பு தொடர்கிறது.
தேர்தலைக் குறிவைத்து நடத்தப்பட்ட மாநாடு: நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலை மனதில் வைத்து, தனது பலத்தை காட்டுவதற்காக இந்த மாநாட்டை நடத்தியுள்ளது கொ.ம.தே.க. லட்சக்கணக்கான கொங்கு சமுதாய மக்களை ஓரணியில் திரட்டியதன் மூலம் தனது பலத்தை அதிமுக, திமுக கட்சிகளுக்கு உணர்த்தியுள்ளது என்றுதான் கூற வேண்டும். நாமக்கல் நகரத்தை நாள் முழுவதும் திணறடித்து விட்டனர் கொ.ம.தே.க. தொண்டர்களும், கொங்கு சமுதாய மக்களும்.
மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தியாக கொ.ம.தே.க. இருக்கும் என மாநாட்டு நிறைவுரையில் பேசிய ஈஸ்வரன் தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் கூட்டணிக்கு தலைமை ஏற்கும் இரண்டு பிரதான கட்சிகளுக்கு சில நிபந்தனைகளையும் விதித்தார். அதில் கூட்டணி கட்சிக்கு தொகுதிகளை ஒதுக்கும்போது, அந்த கட்சிக்கு அந்த தொகுதியில் 1 லட்சம் வாக்குகளுக்கு குறையாமல் இருக்குமா என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் எனப் பேசினார். இதன் மூலம் கூட்டணி கட்சிகளுக்கு வாக்கு வங்கி உள்ள தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்பதை உணர்த்தியிருக்கிறார்.
இதுபோல், கூட்டணியில் உள்ள கட்சியின் தலைவர், பிற சமுதாய மக்கள் குறித்து இழிவாகப் பேசி அந்த கூட்டணியின் வாக்கு வங்கி வலிமையைச் சிதைக்க முயற்சிப்பதையும் கூட்டணிக்கு தலைமையேற்கும் கட்சி கண்டிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியை மறைமுகமாகச் சாடியுள்ளார்.
இந்த நிபந்தனைகளை ஏற்கும் பிரதானக் கட்சிகளுடன் கூட்டணிக்கு தயார் என்பதையும், கூட்டணி அதிமுக அல்லது திமுகவுடன் தான் இருக்கும் என்றும் அவர் கோடிட்டுக்காட்டி இருக்கிறார் என்கின்றனர் அக் கட்சியினர்.
மாநாட்டில் தி.மு.க.வின் பிரதிநிதி?: மாநாட்டுக்கு முதல்வர், எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் கொங்கு மண்டலத்தைச் சார்ந்த அனைத்துக் கட்சிகளின் மாவட்டச் செயலர்களுக்கும் அழைப்பு கொடுக்கப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் அரசியல் சார்ந்து ஈரோடு தெற்கு மாவட்ட திமுக செயலரும், முன்னாள் அமைச்சருமான சு.முத்துசாமி மட்டுமே வந்திருந்தார். அவரை மேடையேற்றி பொன்னாடை அணிவித்து கெüரவப்படுத்தினார் ஈ.ஆர்.ஈஸ்வரன். சில நிமிடங்கள் மாநாட்டுத் திடலில் இருந்த முத்துசாமி, அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
தி.மு.க.வில் மாவட்டச் செயலராக இருக்கும் முத்துசாமி கட்சி தலைமையிடம் அனுமதி கேட்காமல் மாநாட்டுக்கு வந்திருக்க மாட்டார். இதனால் அவரின் வருகை, அரசியல் ரீதியாக உற்றுநோக்கப்படுகிறது.
வெற்றிக்கனியை எதிர்நோக்கி: தமிழ்நாட்டில் முதலாவதாக நடத்தப்பட்டுள்ள 2 ஆம் உலக கொங்கு தமிழர் மாநாடு (முதல் மாநாடு மலோசியாவில் நடத்தப்பட்டது) கொ.ம.தே.க.வின் வலிமையைக் காட்டும் மாநாடாக மாறியுள்ளது. தனியாக அரசியல் இயக்கம் நடத்திவரும் இந்த சமுதாயத்தைச் சேர்ந்த தனியரசு 2ஆவது முறையாக எம்.எல்.ஏ.வாக உள்ளார். ஆனால், 10 ஆண்டு காலம் அரசியல் களத்தில் உள்ள கொ.ம.தே.க. இதுவரை வெற்றிக்கனியைப் பறிக்கவில்லை. இந்த முறை கட்டாயம் அந்தக் கனியைப் பறித்துவிட வேண்டும் என்பதில் முனைப்பாக இருக்கிறார் ஈஸ்வரன்.
அவர் மாநாட்டு மேடையில் பேசியபோது, சென்னையில் தொழில் செய்து வந்த நான், பெட்டியை எடுத்துக்கொண்டு கொங்கு சமுதாய மக்களுக்குச் சேவையாற்ற வந்துவிட்டேன். போகும்போது வெறும் கையோடு போக மாட்டேன், எம்.பி., எம்.எல்.ஏ.க்களோடு தான் போவேன் என்று ஈஸ்வரன் பேசியபோது, அரங்கமே அதிர்ந்தது. அந்தக் கணக்கை வரும் மக்களவைத் தேர்தலில் தொடங்கிவைப்பார் என்பதற்கு இந்த மாநாடு அச்சாரமாக இருக்கும் என்கின்றனர் அக் கட்சி
நிர்வாகிகள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.