நாமக்கல்

பணம், பரிசுப் பொருள்கள் விநியோகத்தை தடுக்க பறக்கும் படை வாகனங்களை அதிகரிக்க உத்தரவு

DIN

நாமக்கல் மக்களவைத் தொகுதியில் பறக்கும் படை வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. 
நாமக்கல் மக்களவைத் தொகுதியில், ராசிபுரம், சேந்தமங்கலம், நாமக்கல், திருச்செங்கோடு, பரமத்தி வேலூர், சங்ககிரி ஆகிய 6 தொகுதிகள் உள்ளன. கடந்த 10-ஆம் தேதி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியானது. அதன்பின், 6 தொகுதிகளிலும் துணை வட்டாட்சியர் நிலையான அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படை, நிலை கண்காணிப்புக்குழு, விடியோ கண்காணிப்புக்குழு உருவாக்கப்பட்டது. தினமும் 8 மணி நேர அடிப்படையில், இக்குழுக்களில் ஒரு துணை வட்டாட்சியர், உதவி ஆய்வாளர், காவலர், ஓட்டுநர், விடியோ பதிவு செய்பவர் என 5 பேர் நியமிக்கப்பட்டனர். ஒரு தொகுதிக்கு, மூன்று வேளைகளில் 45 பேர் வீதம், 6 தொகுதிகளில் மொத்தம் 270 பேர் நியமிக்கப்பட்டனர்.
தேர்தலையொட்டி, வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் வழங்குவதை தடுக்கும் பொருட்டு, பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்புக் குழுவினர் கடந்த 15 நாள்களாக தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.
இதில், நாமக்கல் மாவட்டத்தில் ரூ.42 லட்சம், 8.75 கிலோ வெள்ளிப் பொருள்கள், 5 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றில், ரூ.24 லட்சம், 4.25 கிலோ வெள்ளிக்கு உரிய ஆவணங்கள் காண்பிக்கப்பட்டதால் சம்பந்தப்பட்ட நபர்களிடம் அவை திரும்ப ஒப்படைக்கப்பட்டன.
நாமக்கல் தொகுதியை பொருத்தவரை, பணம் மற்றும் பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்யும் நடவடிக்கை குறைவான அளவில் இருப்பதாக, தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டதாக தெரிகிறது. தேர்தலுக்கு இன்னும் 22 நாள்களே உள்ளதால், தொகுதியில் வாகனச் சோதனையை தீவிரப்படுத்த தேர்தல் அதிகாரியான மு.ஆசியா மரியம்
உத்தரவிட்டுள்ளார்.
இதற்காக, பறக்கும் படைக்குழு மட்டும், தொகுதிக்கு ஒன்று வீதம் அதிகரிக்கப்படுகிறது. இதற்காக ஊரக வளர்ச்சித் துறை சார்ந்த அலுவலர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். மேலும், பல்வேறு அரசுத் துறை வாகனங்களும் பறக்கும் படை சோதனைக்காக பயன்படுத்தப்படுகிறது. அதற்கான அலுவலர், உதவி ஆய்வாளர், காவலர் ஆகியோரை தேர்வு செய்யும் நடைபெற்று வருகிறது. 
இது தொடர்பாக, தேர்தல் பிரிவு அதிகாரி ஒருவர் கூறியது: தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் வாகனச் சோதனையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கெனவே, 54 குழுக்களில் 270 பேர் பணியில் உள்ளனர். பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல் செய்வதற்காக ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதிக்கும், கூடுதலாக ஒரு பறக்கும் படைக்குழு அமைக்கப்படுகிறது. ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள் மட்டுமின்றி, இதர துறை சார்ந்த அலுவலர்களும் பணியமர்த்தப்படுகின்றனர். அதற்கான பட்டியலை தயார் செய்து வருகிறோம். அரசு வாகனங்கள் மட்டுமின்றி, தனியார் வாகனங்களையும் வாடகைக்கு எடுக்க உள்ளோம் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டுக்கு மே 3 வரை மஞ்சள் எச்சரிக்கை! | செய்திகள்: சிலவரிகளில் | 30.04.2024

ப்ளே ஆஃப் போட்டியில் நீடிக்குமா லக்னௌ!

மருத்துவர் உள்பட 5 பேர் மரணம்: என்ன நடந்தது?

அதிமுக முன்னாள் கவுன்சிலர் மகன் வெட்டிக் கொலை!

சஞ்சு சாம்சன் ரசிகரா சசி தரூர்?

SCROLL FOR NEXT