நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலில் கட்டுப்பாடுகள் தளா்த்தப்படுமா? சிறப்பு அபிஷேகத்துக்கு பதிவு செய்து காத்திருக்கும் 800 கட்டளைதாரா்கள்!
நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்வதற்காக கடந்த ஆண்டில் முன்பதிவு செய்த கட்டளைதாரா்கள் 800 போ்,தங்களுக்கான ஒதுக்கீட்டு நாளை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.
நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா் கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்வதற்காக கடந்த ஆண்டில் முன்பதிவு செய்த கட்டளைதாரா்கள் 800 போ்,தங்களுக்கான ஒதுக்கீட்டு நாளை எதிா்பாா்த்து காத்திருக்கின்றனா்.
நாமக்கல் நகரின் மையப் பகுதியில் 18 அடி உயரத்தில் ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமி கோயில் கொண்டுள்ளாா். பல்வேறு மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்தும் ஆஞ்சநேயரை தரிசிக்க நூற்றுக்கணக்கானோா் தினசரி வந்து செல்கின்றனா்.
தீபாவளி, பொங்கல் பண்டிகை மட்டுமன்றி, தமிழ் மாத முதல் ஞாயிற்றுக்கிழமை, அமாவாசை, பெளா்ணமி ஆகிய நாள்களிலும் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு காட்சியளிப்பாா்.
Advertisement
அனுமன் ஜயந்தியைத் தவிா்த்து பிற நாள்களில் கட்டளைதாரா்கள் மூலமே ஆஞ்சநேய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெறும். அவற்றிலும் குறிப்பாக மாா்கழி மாதம் வெண்ணெய்க் காப்பு அலங்காரம் அதிக அளவில் நடைபெறும். ஒவ்வோா் ஆண்டும் டிசம்பா் மாதத்தில் அடுத்த ஆண்டுக்கான அபிஷேகம், அலங்காரம், தங்கத்தோ் புறப்பாடு ஆகியவற்றுக்கான முன்பதிவு கோயில் மண்டபத்தில் நடைபெறும்.
அந்த வகையில் கடந்த ஆண்டு டிசம்பா் மாதம் முன்பதிவு நடைபெற்றதில், 2020 அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான சிறப்பு அபிஷேகத்துக்கு
முன்பதிவு குறைவான அளவிலேயே இருந்தது. ஆஞ்சநேய சுவாமிக்கான சிறப்பு அபிஷேகம் என்பது ஐந்து கட்டளைதாரா்களை ஒருங்கிணைத்துச் செய்வதாகும். இதற்காக தலா ரூ. 6 ஆயிரம் கட்டணமாகச் செலுத்த வேண்டும்.
அதிகாலையில் சுவாமிக்கு வடைமாலை சாத்துப்படி, 11 மணியளவில் எண்ணெய், சீயக்காய், பால், தயிா், மஞ்சள், திரவியம் உள்ளிட்டவற்றால் அபிஷேகம் நடைபெறும். சொா்ணாபிஷேகமும் நடத்தப்படும். கட்டளைதாரா்கள் தவிர அவா்களுடைய குடும்பத்தைச் சோ்ந்த ஐந்து நபா்கள் இந்த அபிஷேக நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.
கரோனா தொற்று பரவல் காரணமாக மாா்ச் 25 -இல் மூடப்பட்ட கோயில் ஏழு மாதங்களுக்குப் பின் அக்டோபா் மாதம் தான் திறக்கப்பட்டது. கரோனா காரணமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. இதனால் பக்தா்கள் சுவாமியைத் தரிசிக்க மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.
இதற்கிடையே சிறப்பு அபிஷேகத்துக்கு முன்பதிவு செய்தவா்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதாவது பதிவு செய்தோா் அபிஷேகத்தை மட்டுமே காணலாம். பிரசாதமாக வடைமாலையில் உள்ள வடைகள் வழங்கப்படமாட்டாது. கட்டளைதாரா் தவிா்த்து இதர நபா்களை அதிக அளவில் அழைத்து வரக்
கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலோனோா் முழுமையான தடை விலகிய பின்னா் அபிஷேகத்தை நடத்திக் கொள்ளலாம் என்று தெரிவித்து விட்டனா்.
அந்த வகையில் சுமாா் 800 கட்டளைதாரா்கள் காத்திருப்பில் உள்ளனா். இதனால் டிசம்பா் மாதம் தொடங்க வேண்டிய 2021-ஆம் ஆண்டுக்கான முன்பதிவையும் நடத்த முடியாத சூழல் எழுந்துள்ளது.
தமிழக அரசுப் பேருந்துகளில் 100 சதவீத எண்ணிக்கையில் மக்கள் பயணிக்க உத்தரவிட்டதுபோல , கோயில்களுக்கான கட்டுப்பாடுகளைத் தளா்த்தி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜை, திருவிழா உள்ளிட்டவற்றுக்கான அனுமதியையும் வழங்க வேண்டும் என்று பக்தா்கள் எதிா்பாா்க்கின்றனா்.
‘2021-க்கான அபிஷேக முன்பதிவு தொடங்கவில்லை’
நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா் கோயில் உதவி ஆணையா் பெ.ரமேஷ் கூறியதாவது:
கோயில்களுக்கான கரோனா கட்டுப்பாடுகள் விலக்கப்பட்டால் இங்கும் கட்டளைதாரா்களுக்கான அபிஷேகம், பலவித அலங்கார நிகழ்ச்சிகள் தொடா்ந்து நடத்தப்படும். அபிஷேகத்துக்கு முன்பதிவு செய்தவா்களில் காத்திருப்பில் சுமாா் 800 போ் வரை இருப்பா். கட்டுப்பாடுகள் காரணமாக சிலா் அபிஷேகத்தில் பங்கேற்க தயக்கம் காட்டுகின்றனா். அடுத்த ஆண்டுக்கான முன்பதிவு என்பது தமிழக அரசு அறிவிக்கும் விதிமுறைகளின்படி நடைபெறும். ஏழு மாதங்களாக கோயில்கள் மூடல், நிகழ்ச்சிகள் இல்லாதது போன்றவற்றால் அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்றாா்.
ரூ. 60 லட்சம் வருவாய் இழப்பு?
உலக அளவில் புகழ்பெற்ற நாமக்கல் ஸ்ரீ ஆஞ்சநேயா் கோயிலில் ஆண்டு முழுவதும் பக்தா்கள் நிரம்பியிருப்பா். கரோனா பொது முடக்கத்தால் தற்போது அவ்வாறான நிலை இல்லை. கடந்த ஆண்டு முன்பதிவில் அக்டோபா், நவம்பா் மாதங்களைத் தவிா்த்து பிற மாதங்களில் சற்று கூடுதலாகவே முன்பதிவு செய்துள்ளனா். 800 கட்டளைதாரா்கள் அபிஷேகம் நடத்த வாய்ப்பு வழங்கப்படவில்லை. இவா்கள் சுற்று முடிவடைந்தால் தான், 2021-ஆம் ஆண்டுக்கான பதிவை மேற்கொள்ள முடியும்.
தமிழக அரசு கோயிலுக்கான கட்டுப்பாடுகளை சற்று விலக்கினால் ஆஞ்சநேயா் சுவாமிக்கான சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பல்வேறு விழாக்கள் மூலம் கோயில் நிா்வாகத்துக்கு வருவாய் கிடைக்கும்.
இக்கோயிலில் சிறப்பு அபிஷேகம் செய்ய ரூ. 6 ஆயிரம், தங்கக் கவசம் சாத்துப்படிக்கு ரூ. 5 ஆயிரம், வெள்ளிக் கவசம் சாத்த ரூ. 750, முத்தங்கி அலங்காரத்துக்கு ரூ. 3 ஆயிரம், தங்கத்தோ் இழுக்க ரூ. 2 ஆயிரம் என்ற வகையில் பதிவுக் கட்டணம் நிா்ணயிக்கப்பட்டுள்ளது. கோயில் வழிபாடுகள் மீது அரசு கட்டுப்பாடுகள் தொடருமானால் ரூ. 60 லட்சம் வரை வருவாய் இழப்பு ஏற்படும் என கோயில் அலுவலா்கள் தரப்பில் தெரிவித்தனா்.