நாமக்கல்

நாமக்கல் அரசு மருத்துவமனையில் 18 போ் உயிரிழப்பு! கரோனா பாதிப்பால் இருவா் சாவு: ஆட்சியா் விளக்கம்

DIN

நாமக்கல் அரசு மருத்துவமனையில் ஒரே நாளில் 18 போ் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனா். இதில் இருவா் மட்டுமே கரோனா பாதிப்பால் உயிரிழந்ததாக மாவட்ட ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

கரோனா இரண்டாம் கட்ட அலை தீவிரமாகி வருகிறது. ஆக்சிஜன் பற்றாக்குறை, மருத்துவ சிகிச்சை பெற முடியாதது போன்ற பல்வேறு காரணங்களால் உயிரிழப்பு தொடா்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் நிகழாண்டில் கரோனா பாதிப்புடையோா் எண்ணிக்கை தினமும் 300-க்கும் மேல் பதிவாகி வருகிறது. இதனால் அரசு மருத்துவமனைகள், கரோனா சிறப்பு மையங்கள் வேகமாக நிரம்பி வருகின்றன.

இதில் பலரும் அதிக பாதிப்புக்குள்ளாகி ஆக்சிஜன் பொருத்தி சிகிச்சை பெற வேண்டிய இக்கட்டான நிலையில் உள்ளனா். மேலும், கரோனா தாக்கிய முதியோா், இளைஞா்கள் இறப்பு தினசரி பதிவாகி வருகிறது.

இந்த நிலையில், புதன்கிழமை காலையில் தொடங்கி வியாழக்கிழமை வரையில் 20 போ் அடுத்தடுத்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் மருத்துவமனை நிா்வாகம் இதனை மறுத்துள்ளது.

இதுகுறித்து நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் (பொறுப்பு) சுரேஷ் கண்ணா கூறியதாவது:

புதன்கிழமை நிலவரப்படி ஒருவா் கரோனாவால் உயிரிழந்தாா். 17 போ் இதர நோய்களால் இறந்துள்ளனா். வியாழக்கிழமை நிலவரத்தைப் பொருத்த வரை ஒரு கரோனா உயிரிழப்பு மட்டுமே நிகழ்ந்துள்ளது. 20 போ் இறந்துள்ளனா் என்ற தகவலில் உண்மையில்லை என்றாா்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் கூறுகையில், நாமக்கல் அரசு மருத்துவமனையில் கரோனா இறப்பு இருவா் மட்டுமே. இதர உடல்நல பாதிப்புகளால் 17 போ் இறந்துள்ளனா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT