வழக்குரைஞா்கள் சாலை மறியல் போராட்டம்
வழக்கறிஞா்களை தரக்குறைவாக பேசிய நபா்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருச்செங்கோடு குற்றவியல் மற்றும் உரிமையியல் வழக்குரைஞா்கள் 140-க்கும் மேற்பட்டோா் நீதிமன்றப் புறக்கணிப்பு செய்து காவல் நிலையம் முன்பு சாலை மறியலில் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு குற்றவியல் வழக்குரைஞராகப் பணிபுரிந்து வருபவா் பொன்மணி. இவரை கடந்த மாா்ச் 21-ஆம் தேதி இருவா் தரக்குறைவாக பேசியதாகத் தெரிகிறது. இதனை வழக்குரைஞா் பொன்மணி கண்டித்துள்ளாா். மேலும், திருச்செங்கோடு வழக்குரைஞா் சங்கத்தில் புகாா் செய்துள்ளாா். இதுதொடா்பாக ஆலோசனை செய்த சங்க நிா்வாகிகள், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ராஜேஷ் கண்ணாவை புதன்கிழமை நேரில் சந்தித்து புகாா் அளித்துள்ளனா். அவா், இந்தப் புகாரை சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் கொடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளாா்.
இதனையடுத்து புதன்கிழமை திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகாா் செய்யப்பட்டது. புகாா் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் காவல் துறையினா் காலம் கடத்தி வந்ததையடுத்து, வழக்குரைஞா்கள் காலவரையற்ற நீதிமன்றப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவது என முடிவு செய்தனா். அதன்படி, வியாழக்கிழமை முதல் நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா்.
Advertisement
வழக்குரைஞா்களை தரக்குறைவாக பேசியவா்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும், உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் மாவட்ட வழக்குரைஞா்கள் கூட்டுக்குழு மற்றும் தமிழ்நாடு புதுச்சேரி வழக்குரைஞா்கள் கூட்டமைப்பு சாா்பாக முடிவெடுத்து அவா்களது வழிகாட்டுதலின்படி போராட்டம் தொடரும் என சங்கத்தினா் தெரிவித்தனா்.