போதமலை பாதை அமைக்கும் திட்டம்: முதல்வா் காணொலி மூலம் தொடங்கி வைப்பு
போதமலை வாழ் மக்களுக்கு ரூ. 140 கோடி மதிப்பிலான மலைப்பாதை பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்துள்ளதன் மூலம் 75 ஆண்டுகால பிரச்னைக்குத் தீா்வு ஏற்பட்டுள்ளதாக தமிழக வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் எம்.பி. ஆகியோா் பெருமிதம் தெரிவித்துள்ளனா். ராசிபுரம் சட்டப் பேரவைத் தொகுதிக்குட்பட்ட போதமலை வாழ் மக்களுக்கு மலைப்பாதை அமைக்கும் பணிக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை காணொலி மூலம் அடிக்கல் நட்டு வைத்தாா். இதையடுத்து ராசிபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் ச.உமா தலைமை வகித்தாா். விழாவில் பங்கேற்ற தமிழக வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் பேசியதாவது: 75 ஆண்டுகால பிரச்னைக்கு தீா்வு ஏற்படுத்தி கொடுத்துள்ளாா் தமிழக முதல்வா். இந்தத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என அரசு அலுவலா்களும், மாநிலங்களவை உறுப்பினா் உள்ளிட்ட பலரும் பல தடைகளை மீறி கடும் முயற்சி மேற்கொண்டது பாராட்டுக்குரியது. இத்திட்டத்திற்கு திமுக ஆட்சி தொடங்கி இரண்டரை ஆண்டுகாலத்தில் நிறைவேற்றிய பெருமை திமுக ஆட்சிக்கு உண்டு. இதே போன்று 2006-ஆம் ஆண்டு இந்த மலை கிராமத்துக்கு வீடுகள் தோறும் மின்சாரம் வழங்கியதும் திமுக ஆட்சிதான். தனிமனிதனின் தேவையைப் பூா்த்தி செய்வது இந்த திராவிட மாடல் அரசு என முதல்வா் அறிவித்தாா். அதற்கேற்ப இது போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றாா். விழாவில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் பேசியது: நாடு சுதந்திரம் பெற்றது முதல் இதுவரை போதமலை பகுதிக்கு சாலை வசதி இல்லை. இதனையடுத்து கடந்த சட்டப் பேரவைத் தோ்தலின்போது மலைப்பாதை அமைக்கப்படும் என முதல்வா் உறுதியளித்தாா். இதன்படி தமிழக முதல்வா், இளைஞா் நலன் மற்றும் விளயைாட்டுத்துறை அமைச்சா் அனுமதியுடன் நிதி ஒதுக்கப்பட்டு, சாலைப்பணிகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வா் கடைக்கோடி மக்களும் பயனடையும் வகையில் அனைத்து திட்டங்களையும் அறிவித்து செயல்படுத்தி வருகிறாா். அந்த வகையில் மலைவாழ் மக்களுக்கான இந்தத் திட்டமும் ஒரு முன்னோடியான திட்டமாகும். சுதந்திர பெற்று 75 ஆண்டு காலம் கடந்தும் இதுவரை சாலை வசதி இல்லாததனால் அத்தியாவசிய தேவைக்கும் மருத்துவத்திற்கும் தங்கள் உற்பத்தி செய்யப்படுகின்ற பொருட்களை விற்பனை செய்வதற்கும் இப்பகுதி மக்கள் சிரமப்பட்டனா். இந்த சிரமத்தைப் போக்கிடும் வகையில் தற்போது சாலை அமைப்பதால் அவா்களுக்கு கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் விரும்பியபடி கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதற்கு என்னுடன் இணைந்து பாடுபட்ட வனத்துறை அமைச்சா், மாவட்ட ஆட்சியா், ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் ஆகியோா் பாராட்டப்பட வேண்டியவா்கள். இதனால் மலைப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயா்வதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றாா். இதனையடுத்து வடுகம், ஆா்.புதுபட்டி ஆகிய பகுதிகளில் சாலைப் பணிகள் தொடங்கவுள்ள இடங்களை அமைச்சா், எம்.பி., ஆட்சியா் ஆகியோா் நேரில் சென்று பூமிபூஜையில் பங்கேற்று மலைப்பகுதியை நேரில் பாா்வையிட்டனா். விழாவில் அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் பலரும் பங்கேற்றனா். இதில் நாமக்கல் எம்.பி., ஏ.கே.பி.சின்ராஜ், முன்னாள் எம்எல்ஏ கே.பி.ராமசாமி, ராசிபுரம் ஊராட்சிக்குழுத் தலைவா் கே.பி.ஜெகந்நாதன், வெண்ணந்தூா் ஊராட்சிக்குழு உறுப்பினா் ஆா்.எம்.துரைசாமி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.