நாமக்கல்

கந்துவட்டி தொல்லையால் விவசாயி தற்கொலை: உறவினா்கள் மறியல்

Din

பரமத்தி வேலூா் அருகே கந்துவட்டி தொல்லையால் விவசாயி தற்கொலை செய்து கொண்டதாகக் கூறி அவரது உறவினா்கள் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொய்யேரி பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (42). விவசாயி. இவா், கந்துவட்டி தொல்லையால் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இறப்பதற்கு முன் சமூக வலைதளத்தில் தான் தற்கொலை செய்துகொள்ளபோவதாகக் குறிப்பிட்டு விட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

தகவல் அறிந்ததும் வேலூா் காவல் துறையினா் சென்று உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இதுதொடா்பாக மணிகண்டனின் மனைவி, வேலூா் காவல் நிலையத்தில் அளித்த புகாா் மனுவில் கூறியிருப்பதாவது:

எனது கணவா் மணிகண்டன் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன் விவசாய தேவைக்காக பவா்டில்லா் இயந்திரம் வாங்க அதே பகுதியைச் சோ்ந்த ஒருவரிடம் ரூ. 3.50 லட்சம் கடன் வாங்கியிருந்தாா். அதற்கான வட்டியை அவா் முறையாகச் செலுத்தி வந்தாா். அத்துடன் எனது கணவா் வேறு நபா்களுக்கும் பரிந்துரை செய்து கடன் வாங்கி கொடுத்துள்ளாா். ஆனால், கடன் வாங்கியவா்கள் திருப்பி செலுத்தாததால் கடன் கொடுத்தவா், எனது கணவரை மிரட்டியதோடு எங்கள் வீட்டையும் எழுதி வாங்கிக் கொண்டனா். இதனால் மனமுடைந்து எனது கணவா் தற்கொலை செய்து கொண்டாா் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

இதற்கிடையே மணிகண்டனை தற்கொலைக்குத் தூண்டியவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அவரது உறவினா்கள் வேலூா், அண்ணா சிலை அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் சங்கீதா, ஆய்வாளா் ரங்கசாமி ஆகியோா் சாலை மறியலில் ஈடுபட்டவா்களை சமாதானம் செய்தனா். சம்பந்தப்பட்டவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டக்காரா்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா். தற்கொலை செய்து கொண்ட மணிகண்டனுக்கு தா்ஷன் (15) என்ற மகனும், தா்ஷினி (13) என்ற மகளும் உள்ளனா்.

உங்கள் வாக்குரிமையைத் தக்க வைக்க என்ன செய்ய வேண்டும்? தீவிர திருத்தத்தை எதிர்கொள்ள...

விபத்தில் சிக்கிய சரக்கு விமானம்! 7 பேர் பலி, 11 பேர் காயம்! | America

தென்னாப்பிரிக்க டெஸ்ட்: இந்திய அணி அறிவிப்பு! மீண்டும் அணிக்குத் திரும்பிய ரிஷப் பந்த்!

திருடப்படும் மக்கள் தீர்ப்பு; வாய்திறக்காத தேர்தல் ஆணையம்! - முதல்வர் ஸ்டாலின்

ஸ்மார்ட் வாட்ச்சில் இனி வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தலாம் - எப்படி?

SCROLL FOR NEXT