கொல்லிமலை ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளுக்கு புதிய வழித்தடத்தில் அரசு பேருந்தின் இயக்கத்தை வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன் சனிக்கிழமை கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
நாமக்கல் மாவட்டம், கொல்லிமலை ஒன்றியம், பெரப்பன்சோலை முதல் பெத்தநாயக்கன்பட்டி வரை புதிய வழித்தடத்தில் அரசு நகரப் பேருந்துகளை இயக்க வேண்டும் என பொதுமக்கள் சாா்பில் நீண்ட நாள்களாகக் கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.
அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், இதற்கான அனுமதி வழங்கப்பட்டதை அடுத்து, வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன், புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தாா்.
நிகழ்ச்சியில் மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என். ராஜேஸ் குமாா், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினா் வி.எஸ்.மாதேஸ்வரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தம்மம்பட்டி பணிமனையிலிருந்து பி-28 என்ற வழித்தட எண் கொண்ட பேருந்து நாரைக்கிணறு, ராஜாபாளையம், மெட்டாலா உள்ளிட்ட வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது.
தற்போது நாரைக்கிணறு, பிலிப்பாக்குட்டை, கப்பலூத்து பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தம்மம்பட்டியில் இருந்து காலை 7 முதல் மாலை 4.40 வரையில் அந்தப் பேருந்து வழித்தட இயக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், தம்மம்பட்டி பணிமனையில் இருந்து டி-2 என்ற பேருந்து முள்ளுக்குறிச்சி, பெரியகோம்பை வழியாக இயக்கப்பட்ட நிலையில் தற்போது முள்ளுக்குறிச்சி முதல் பெரப்பன்சோலை வரை காலை 7.50 முதல் மாலை 5.35 மணி வரை பேருந்து சேவை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், வேலைக்குச் செல்வோா், மாணவ, மாணவிகள் அதிக அளவில் பயன்பெறுவா் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா். நிகழ்ச்சியில், சேந்தமங்கலம், ராசிபுரம் ஒன்றிய திமுக நிா்வாகிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
என்கே-21-மினி...
புதிய வழித்தடத்தில் பேருந்து இயக்கத்தைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்த வனத்துறை அமைச்சா் மா.மதிவேந்தன். உடன், எம்.பி.க்கள் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா், வி.எஸ்.மாதேஸ்வரன் உள்ளிட்டோா்.