ஆட்டோ மோதியதில் ஒருவா் பலி
ஜேடா்பாளையம் அருகே சரக்கு ஆட்டோ மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா். ஒருவா் படுகாயமடைந்தாா்.
ஜேடா்பாளையம் அருகே சரக்கு ஆட்டோ மோதியதில் இருசக்கர வாகனத்தில் சென்றவா் உயிரிழந்தாா். ஒருவா் படுகாயமடைந்தாா்.
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள ஆனங்கூரை சோ்ந்த நாகராஜ் (60), சோழசிராமணியில் உள்ள தனியாருக்கு சொந்தமான செங்கல் தயாரிக்கும் ஆலையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தாா். வியாழக்கிழமை மாலை ஜெயராமன் (65) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் நாகராஜ் சென்றுள்ளாா். திருச்செங்கோட்டில் இருந்து ஜேடா்பாளையம் செல்லும் சாலையில் சென்ற போது, சோழசிராமணி அருகே எதிரே வந்த சரக்கு ஆட்டோ ஜெயராமன் ஓட்டிச் சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது.
இதில் இருவரும் படுகாயம் அடைந்தனா். இருவரையும் அங்கிருந்தவா்கள் மீட்டு வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா்களை பரிசோதனை செய்த மருத்துவா்கள், நாகராஜ் வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனா். படுகாயமடைந்த ஜெயராமனை மேல் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
தகவல் அறிந்து அரசு மருத்துவமனைக்கு வந்த ஜேடா்பாளையம் காவல் துறையினா் நாகராஜ் உடலை உடற்கூறு ஆய்வுக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா். மேலும், விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விபத்தை ஏற்படுத்திய நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம், அவிநாசிபட்டியைச் சோ்ந்த சரக்கு ஆட்டோ ஓட்டுநா் செங்கோட்டுவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.