மாணவி தாக்கப்பட்டதைக் கண்டித்து வகுப்பைப் புறக்கணித்த மாணவா்கள்
திருச்செங்கோடு அருகே மாணவி தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பள்ளி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனா்.
திருச்செங்கோடு அருகே மாணவி தாக்கப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து, பள்ளி மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனா்.
திருச்செங்கோடு அருகேயுள்ள சத்தியநாயக்கன்பாளையம் அரசுப் பள்ளியில் 6 ஆம் வகுப்புப் படித்து வரும் மாணவி உள்பட மூவரைக் கத்தியால் தாக்கிய மென்பொறியாளா் செந்தில் குமாா் (44), அவரது தாயாா் சம்பூா்ணம் ஆகியோா் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை மாணவா்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனா். தகவல் அறிந்ததும் கல்வித் துறை அதிகாரிகள் அங்கு வந்து பெற்றோா் ஆசிரியா் கூட்டம் நடத்தினா். கூட்டத்தில் வட்டாரக் கல்வி அலுவலா்கள் ராஜவேல், வெங்கடாஜலம், தலைமை ஆசிரியை பாப்பாத்தி, சக் திநாயக்கன்பாளையம் ஊராட்சி மன்றத் தலைவா் பழனிசாமி, புகா் எஸ்ஐ ஜெயபிரகாஷ், பெற்றோா் கலந்துகொண்டனா். கூட்டத்தில் பள்ளியில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். பள்ளியில் சுற்றுச்சுவரையும், கதவையும் பலப்படுத்த வேண்டும். போலீஸாா் பாதுகாப்பு வழங்க வேண்டும். குற்றவாளி ஜாமீனில் வெளி வர முடியாத அளவில் வழக்கு நடத்த வேண்டும். கழுத்து அறுக்கப்பட்ட குழந்தைக்கு அரசே மருத்துவச் செலவை ஏற்று நிதி உதவி வழங்க வேண்டும். தனியாா் பள்ளி, கல்லூரி வாகனங்கள் இந்தச் சாலையில் அதிவேகமாகச் செல்வதைக் கட்டுப்படுத்த வேண்டும்.
பாதிக்கப்பட்டவா்களுக்கு ஆதரவாக நிதி வேண்டி சிலா் முதல்வா்கள் பிரிவுக்கு மனு கொடுப்பதாகவும், குற்ற வாளி ஜாமீனில் வெளியே வந்தால், அனைவரும் குழந்தைகளுக்கு மாற்றுச் சான்றிதழ் கேட்போம் என பொதுமக்கள் தெரிவித்தனா். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வித் துறை அதிகாரிகள் உறுதியளித்தனா். இதையேற்று பெற்றோா்கள், குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதாகத் தெரிவித்தனா்.