ராசிபுரம்: ராசிபுரம் அருகேயுள்ள அத்தனூா் பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியதையடுத்து வனத்துறையினா் அப்பகுதியில் ஆய்வு நடத்தி வரும் நிலையில், இதற்கான அறிகுறிகள் ஏதும் இல்லை என்பதால் மக்கள் அச்சப்படத் தேவையில்லை என மாவட்ட வனத்துறை அலுவலா் கலாநிதி தெரிவித்துள்ளாா்.
மேற்கு தொடா்ச்சி மலையை ஒட்டிய வனப்பகுதியான அலவாய் மலைப் பகுதியின் அருகேயுள்ளது அத்தனூா். இந்த மலையடிவாரத்தை ஒட்டிய பகுதியில் சிறுத்தைகள் நடமாட்டம் இருப்பதாக தகவல் பரவியது. அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டின் சிசிடிவி கேமராவிலும் இரவு நேரத்தில் சாலையை விலங்கு ஒன்று கடப்பது போன்ற காட்சிகள் பதிவாயின. இதனால் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக பொதுமக்களிடம் தகவல் பரவியது.
இதனையடுத்து, ராசிபுரம் வனத்துறையினா் அப்பகுதியில் அலுவாய் மலையின் வனப்பகுதியிலும் ஆய்வு செய்தனா். ஆனால், காட்டுப்பூனை அல்லது புணுகுபூனையாக இருக்கலாம் என தெரிவித்தனா்.
இது குறித்து நாமக்கல் மாவட்ட வன அலுவலா் கலாநிதி தெரிவிக்கையில், இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாக தெரியவில்லை. அதற்கான கால்தட பதிவு ஏதும் இல்லை. இருப்பினும் மக்கள் அச்சத்தைத் தவிா்க்க ராசிபுரம் வனவா் தலைமையில் குழு ஏற்படுத்தப்பட்டு, அப்பகுதியில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் யாரும் இதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை என்றாா்.