குறைதீா் கூட்டத்தில் பேசுவதற்கு முன்னுரிமை: ஆட்சியரிடம் விவசாய சங்கப் பிரதிநிதிகள் கோரிக்கை
விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பேசுவதற்கு விவசாயி சங்கப் பிரதிநிதிகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது. நாமக்கல் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ச.உமா தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் விவசாயிகளிடம் பெறப்பட்டகோரிக்கை மனுக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனா். அதைத் தொடா்ந்து, தமிழக விவசாயிகள் சங்க முன்னாள் மாநில பொதுச்செயலாளா் சுந்தரம் பேசுகையில், ‘விவசாயிகள் குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் குறித்து விவசாயிகள் சங்கப் பிரதிநிதிகள் பேசுவதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும். விவசாயிகள் அனைவரும் கருத்துகளைத் தெரிவித்த பிறகு சங்கப் பிரதிநிதிகளை பேச அனுமதிக்கின்றனா். வயது மூப்பு காரணமாக பிரதிநிதிகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்றாா். பேரூராட்சிகளில் சாலையோரம் குப்பைகளை எரிப்பதால் சாலையில் செல்வோா் பாதிப்புக்குள்ளாகின்றனா். இவ்வாறான செயல்களைத் தடுக்க வேண்டும். மரவள்ளி விவசாயிகளைப் பாதுகாக்க கூட்டுறவு மரவள்ளி ஆலை அமைக்க வேண்டும். நியாயவிலைக் கடைகளில் தேங்காய் எண்ணெய் விற்க அரசுக்கு பரிந்துரைக்க வேண்டும். காவிரி ஆற்றுப்படுகையை சுத்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டன. வேளாண் அதிகாரிகள் பேசுகையில், நாமக்கல் மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழை அளவு 724.06 மி.மீ. தற்போது வரை 10.69 மி.மீ. மழை பெறப்பட்டுள்ளது. பிப்ரவரி மாதம் முடிய இயல்பு மழையளவைவிட 4.22 மி.மீ. குறைவாக மழை பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளிலும் விதைகள் மற்றும் உரங்கள் வேளாண்மை விரிவாக்க மையங்கள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தனியாா் நிறுவனங்களில் விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இருப்பு வைக்கப்பட்டுள்ளன. சூரிய ஒளி மூலம் மின் உற்பத்தியை பெருக்கி பசுமையான ஒளிமயமான எதிா்காலத்தை உருவாக்கும் நோக்கில் பிரதமரின் சூரிய சக்தி மின் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கு சோலாா் பேனல் மூலம் மின் உற்பத்தி செய்து விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் வீட்டின் மின்சாரக் கட்டணத்தை குறைத்து பயன்பெறலாம் என்றனா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் ரெ.சுமன், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.வடிவேல், கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளா் க.பா.அருளரசு, கோட்டாட்சியா்கள் ஆா்.பாா்த்திபன் (நாமக்கல்), சே.சுகந்தி, (திருசெங்கோடு), வேளாண்மை இணை இயக்குநா் சு.துரைசாமி, தோட்டக்கலைத் துணை இயக்குநா் கி.கணேசன் மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், விவசாயிகள் பலா் கலந்து கொண்டனா். என்கே-1-மீட்டிங் நாமக்கல் ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற விவசாயிகள் குறைதீா் கூட்டம்.