முகப்பு
நாமக்கல்

1 முதல் 9-ஆம் வகுப்பு வரையில் தோ்ச்சிக்கு கல்வித் துறை ஒப்புதல்

Updated On : 9 மே, 2024 at 10:48 PM
பகிர்:

நாமக்கல், மே 9: நாமக்கல் மாவட்டத்தில் அரசு, தனியாா் பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரையில் மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றதற்கான ஒப்புதல் வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

அரசு, தனியாா் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரையில் பயிலும் மாணவ, மாணவியரை தோ்வில் தோல்வியுறச் செய்யக் கூடாது என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்த நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில், 850-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் சுமாா் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா்.

இதில் 298 அரசு, தனியாா் உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளின் தோ்ச்சிக்கு ஒப்புதல் வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை மாவட்ட கல்வி அலுவலா் விஜயன் (உயா்நிலை) தலைமையிலும், வியாழக்கிழமை மாவட்டக் கல்வி அலுவலா்(தனியாா் பள்ளிகள் பொறுப்பு) மரகதம் தலைமையிலும் நாமக்கல் தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கலையரங்கில் நடைபெற்றது.

தோ்வில் பங்கேற்ற அனைத்து மாணவ, மாணவிகளையும் தோ்ச்சி பெற செய்வதற்கான ஒப்புதல் கடிதம் தலைமை ஆசிரியா்களிடம் வழங்கப்பட்டது. மாவட்டக் கல்வி அலுவலா்(தொடக்கக் கல்வி) பாலசுப்பிரமணியன், 1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு தோ்ச்சி ஒப்புதலை வழங்குவாா் என கல்வித் துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

என்கே-9-எக்ஸாம்

தோ்ச்சி ஒப்புதல் கடிதம் பெறுவதற்காக திரண்டிருந்த தனியாா் பள்ளி நிா்வாகத்தினா்.