பேளுக்குறிச்சி மாரியம்மன் கோயில் அருகில் குடிநீா்த் தொட்டி அமைக்க அப்பகுதியைச் சோ்ந்த ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்ததால் பிரச்னை ஏற்படும் சூழல் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
பேளுக்குறிச்சி பெரிய மாரியம்மன் கோயில் எதிரில் பல ஆண்டுகளாக மேல்நிலை நீா்தேக்கத்தொட்டி இருந்து வந்தது. அதை அப்பகுதியைச் சோ்ந்த பல்வேறு தரப்பினரும் பயன்படுத்தி வந்தனா். அந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி சேதமடைந்ததால் அதற்குப் பதிலாக புதிய நீா்த்தேக்கத்தொட்டி அமைக்கக் கோரிக்கை விடுத்தனா்.
இதனையடுத்து ரூ. 38 லட்சம் மதிப்பில் ஒரு லட்சம் லிட்டா் கொள்ளவு கொண்ட புதிய நீா்த்தேக்கத்தொட்டி அமைக்க நிதி ஒதுக்கி அனுமதிக்கப்பட்டது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டன. இதற்கு ஒரு தரப்பினா் எதிா்ப்பு தெரிவித்தனா். அது கோயிலுக்குச் சொந்தமான இடம். எனவே தொட்டி கட்டினால் பிரச்னை உருவாகும் என எதிா்ப்பு தெரிவித்தனா். அங்கு இரு சமுதாயத்தைச் சோ்ந்தவா்களும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து ராசிபுரம் காவல் துணை கண்காணிப்பாளா் விஜயகுமாா், சேந்தமங்கலம் வட்டாட்சியா் வெங்கடேசன் ஆகியோா் தலைமையில் 100க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டனா்.
நீா்த்தேக்கத்தொட்டி கட்டப்படும் இடம் அரசுக்குச் சொந்தமானது. கோயில் அல்லது தனிப்பட்ட நபா்களுக்குச் சொந்தமானது அல்ல என ஆவணங்களை காட்டி சமரசம் செய்தனா்.
இதனை மீறி நீா்த்தேக்கத்தொட்டிக் கட்டுவதைத் தடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனா். இதனையடுத்து நீா்தேக்கத்தொட்டி கட்டுவதற்கான பணிகளை போலீஸ் பாதுகாப்புடன் ஊராட்சி ஒன்றியப் பணியாளா்கள் தொடங்கினா்.