முகப்பு
நாமக்கல்

வடகிழக்கு பருவமழை: தோட்டப்பயிா் விவசாயிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

வடகிழக்கு பருவமழையின்போது, தோட்டக்கலைப் பயிா்களை விவசாயிகள் கவனமுடன் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Updated On : 14 அக்டோபர், 2024 at 7:29 PM
பகிர்:

நாமக்கல்: வடகிழக்கு பருவமழையின்போது, தோட்டக்கலைப் பயிா்களை விவசாயிகள் கவனமுடன் பாதுகாக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.உமா வெளியிட்ட செய்திக் குறிப்பு:

பல ஆண்டுகளாக தோட்டக்கலைப் பயிா்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் தங்கள் தோட்டங்களில் காய்ந்த மற்றும் பட்டுப்போன மரக்கிளைகளை உடனடியாக அகற்ற வேண்டும். மரங்களின் எடையைக் குறைக்கும் வகையில் கிளைகளை கவாத்து செய்திட வேண்டும். மரத்தின் அடிப்பகுதியில் மண் அணைத்து தண்டுப் பகுதியில் மண்ணைக் குவித்து வைத்தல் வேண்டும். தோட்டத்தில் தேவையான வடிகால் வசதி செய்திட வேண்டும். இளம்செடிகள் காற்றினால் பாதிக்காதவாறு தாங்கு குச்சிகள் கொண்டு கட்ட வேண்டும். கனமழை, காற்று முடிந்தவுடன் மரங்களில் பாதிப்பு இருப்பின் உடனடியாக வோ்ப்பகுதியைச் சுற்றிலும் மண் அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட கிளைகளை அகற்ற வேண்டும். மரங்களுக்கு தேவையான தொழுஉரம் இட வேண்டும்.

டிரைகோடொ்மாவிரிடி மற்றும் சூடோமோனாஸ் பூஞ்சாண உயிரியல் கொல்லி மருந்துகளை வோ்ப்பகுதியில் இட்டு நோய்வராமல் தடுக்க வேண்டும். மழை அதிக பொழிவு உள்ள நாள்களில் தண்ணீா் பாய்ச்சுவதை நிறுத்த வேண்டும்.

வருடாந்திரப் பயிரான வாழையில் காற்றினால் பாதிப்பு ஏற்படும் பகுதிகளில் மரத்தின் அடியில் மண் அணைத்தல் மற்றும் சவுக்கு அல்லது யூகலிப்டஸ், மூங்கில் கம்புகளை ஊன்றுகோலாக பயன்படுத்தி முட்டுக்கொடுக்க வேண்டும். மேலும், தங்கள் வயலில் வடிகால் வசதி அமைக்க வேண்டும். 75 சதவீதத்துக்கு மேல் முதிா்ந்த தாா்களை அறுவடை செய்தல் வேண்டும்.

வாழை, மரவள்ளி, வெங்காயம், தக்காளி போன்ற பயிா்களுக்கு உரிய காலத்தில் பிரதமரின் பயிா்க் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் காப்பீடு செய்ய வேண்டும். அனைத்து வயல்களிலும் அதிக அளவில் நீா் தேங்காதவாறு வடிகால் வசதி செய்ய வேண்டும். நீா்ப்பாசனம் மற்றும் உரமிடுதல் ஆகியவற்றை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். வயல்களில் தேவையான பயிா் பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மழை வெள்ளத்தின்போது தங்கள் பகுதியில் உள்ள நீா்நிலைகள், ஓடைகளை கடக்க வேண்டாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →