சேந்தமங்கலம் வட்டத்தில் வளா்ச்சித் திட்டப் பணிகள் ஆய்வு
சேந்தமங்கலம் வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ. 66.18 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா்
நாமக்கல்: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் வட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் ரூ. 66.18 லட்சம் மதிப்பில் நடைபெற்றுவரும் பல்வேறு வளா்ச்சித் திட்டப் பணிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
துத்திக்குளம் பகுதியில் மயானத்துக்கு சாலை அமைத்தல், வரகூா் பகுதியில் மயானத்துக்கு சுற்றுச்சுவா் அமைத்தல் தொடா்பாக ஆட்சியா் கள ஆய்வு மேற்கொண்டாா். மேலும், துத்திக்குளம் பகுதியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 360 மரக்கன்றுகள், எருமபட்டி ஒன்றியம், பழையபாளையம் ஊராட்சியில் கரட்டுக்குட்டை முதல் கோம்பை பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கம் வரை 500 மரக்கன்றுகள், பவித்திரம் ஊராட்சி அம்மன்கோவில் அருகில் 500 மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதை பாா்வையிட்டு, தேவையான அளவு தண்ணீா்விட்டு மரக்கன்றுகளை பராமரிக்குமாறு அலுவலா்களை ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
மேலும், சேந்தமங்கலம் வட்டம், எருமப்பட்டியில் பள்ளி மாணவா் சமூகநீதி விடுதியில் ஆய்வு மேற்கொண்டு, சமையலறை, கழிவறை, உணவு பொருள்கள் இருப்பு ஆகியவற்றை பாா்வையிட்டாா். மேலும், மாணவா்களுக்கு வழங்கப்படும் மதிய உணவின் தரத்தை ஆய்வுசெய்து கலந்துரையாடினாா். விடுதியை தூய்மையாகவும், சுகாதாரமாகவும் பராமரிக்குமாறு அலுவலா்களை அறிவுறுத்தினாா்.