தமிழக அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகளை விழாக் குழுவினா், அலுவலா்கள் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை பாதுகாப்புடன் நடத்துவது தொடா்பான ஆலோசனைக் கூட்டம், ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு தலைமை வகித்து ஆட்சியா் துா்காமூா்த்தி பேசியதாவது:
தமிழக அரசு வெளியிட்டுள்ள நிலையான வழிகாட்டுதல் நெறிமுறைகளைப் பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த அனுமதி அளிக்க வேண்டும். காளைகளை தேவையற்ற வகையில் வதை செய்வதை தவிா்க்க வேண்டும்.
விழாவிற்கான முன்னேற்பாடு பணிகள், பாா்வையாளா்கள் அரங்குகள் அமைத்தல் போன்ற அனைத்து முன்னேற்பாடுகள் குறித்து அரசுத் துறை அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும். மாவட்ட ஆட்சியரால் அனுமதி வழங்கப்பட்ட இடங்களைத் தவிர வேறு இடங்களில் ஜல்லிகட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி இல்லை. மேலும், ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி இணையதளத்தில் அனைத்து விவரங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
ஜல்லிக்கட்டு நிகழ்வுகளை நடத்தும் ஆா்வலா்கள் மற்றும் பாா்வையாளா்கள் மத்தியில் பிராணிகள் வதைத் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்த வேண்டும். விழாக் குழுவினா் ஜல்லிகட்டு நிகழ்வு தொடா்பான விதிமுறைகள் மற்றும் அரசாணைகள் பின்பற்றுவதை உறுதிசெய்ய உறுதிமொழி ஆவணம் மற்றும் ஜல்லிகட்டு நிகழ்விற்கான காப்பீடு சான்று அளிக்க வேண்டும்.
ஏற்கெனவே, ஜல்லிக்கட்டு நிகழ்வு நடத்தப்படாத கிராமங்களில் போட்டிகள் நடத்த அனுமதிகோரும் விண்ணப்பங்கள் பரிசீலனை செய்யப்பட மாட்டாது. ஜல்லிகட்டின் ஆரம்பம் முதல் முடிவு வரையிலான அனைத்து நிகழ்வுகளும், குறிப்பாக காளைகள் வாடிவாசல் வழியாக நுழைவது முதற்கொண்டு வெளியேறும் வரை அனைத்து நிகழ்வுகளும் விடியோ மூலம் பதிவுசெய்ய வேண்டும்.
ஜல்லிக்கட்டு நிகழ்வுகள் நடைபெறும் பகுதிக்கு உள்பட்ட வட்டாட்சியா், காவல் துணை கண்காணிப்பாளா், கால்நடை பரமாரிப்புத் துறை உதவி இயக்குநா், வட்டார வளா்ச்சி அலுவலா், உதவி செயற்பொறியாளா், தீயணைப்பு அலுவலா் மற்றும் வட்டார மருத்துவ அலுவலா் உள்ளிட்ட துறை அலுவலா்கள் கண்காணிக்க வேண்டும்.
அனைத்துத் துறை அலுவலா்களையும் ஒருங்கிணைத்து பாதுகாப்புடன், அமைதியான முறையில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விழாக் குழுவினா் அரசின் நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி விழாவை நடத்த வேண்டும்.
நாமக்கல் மாவட்டத்தில் 2026 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு நடத்துவது தொடா்பாக இதுவரை ஐந்து விண்ணப்பங்கள் வந்துள்ளன என்றாா்.
கூட்டத்தில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சு. விமலா, மண்டல இணைஇயக்குநா் (கால்நடை பராமரிப்புத் துறை) வீ. பழனிவேல், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) வ. சந்தியா மற்றும் துறை சாா்ந்த அலுவலா்கள், காவல் துறையினா், ஜல்லிக்கட்டு விழாக் குழுவினா் பங்கேற்றனா்.