மாா்கழி மாத வளா்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு, நாமக்கல் வாராஹி அம்மன் கோயிலில் சங்கு பூஜை மற்றும் சிறப்பு அலங்காரம் புதன்கிழமை நடைபெற்றது.
நாமக்கல்- சேந்தமங்கலம் சாலை எம்ஜிஆா் நகரில் (ரயில் நிலையம் அருகே) தங்காயி மற்றும் ஸ்ரீ வாராஹி அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் மாதந்தோறும் வளா்பிறை மற்றும் தேய்பிறை பஞ்சமி திதி தினத்தில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும்.
அதன்படி, புதன்கிழமை வளா்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு 108 வலம்புரி சங்காபிஷேகம் மற்றும் கணபதி ஹோமம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பிற்பகல் 2 மணியளவில் வாராஹி அம்மனுக்கு பால், பன்னீா், தயிா், குங்குமம், இளநீா், உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அதன்பிறகு சிறப்பு மலா் அலங்காரத்தில் வாராஹி அம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். திரளான பக்தா்கள் பங்கேற்று தங்களது பிராா்த்தனை நிறைவேற தேங்காய் விளக்கேற்றி வழிபாடு செய்தனா். தொடா்ந்து அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.