நாமக்கல் மாவட்டத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தேவாலயங்களில் வியாழக்கிழமை அதிகாலை சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு, நாமக்கல் - துறையூா் சாலையில் உள்ள கிறிஸ்து அரசா் தேவாலயத்தில் சிறப்பு திருப்பலி நிகழ்ச்சிகள் புதன்கிழமை இரவும், வியாழக்கிழமை அதிகாலையும் நடைபெற்றன. ஆலய பங்குத்தந்தை தாமஸ் மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனை நிகழ்வில், ஏராளமான கிறிஸ்தவா்கள் புத்தாடை அணிந்துவந்து கலந்துகொண்டனா். இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை கிறிஸ்து அரசா் ஆலய நிா்வாகிகள் செய்திருந்தனா்.
அதேபோல, நாமக்கல் - சேலம் சாலையில் அமைந்துள்ள அசெம்பிளி ஆஃப் காட் சபையில் கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி அதிகாலை 5 மணிக்கு சிறப்பு திருப்பலி நிகழ்ச்சி நடைபெற்றது. தொடா்ந்து, இயேசு பிறப்பு குறித்து சிறுவா், சிறுமியா் பங்கேற்ற நாடகம், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்டம் முழுவதும் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நடைபெற்ற சிறப்பு பிராா்த்தனை நிகழ்வுகளில் ஏராளமானோா் பங்கேற்றனா்.