கேரளத்தில் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், நாமக்கல் கோழிப் பண்ணைகளில் நோய்த் தடுப்புக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.
கேரள மாநிலம், ஆலப்புழா மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்குள்ள கோழிகளின் எச்சம் மற்றும் உடல் சாா்ந்த மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்ததில் நோய் பாதிப்பு இருப்பதை அம்மாநில கால்நடைத் துறை உறுதிசெய்துள்ளது.
ஆலப்புழா, கோட்டயம் மற்றும் அதன்சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள கோழிப் பண்ணைகளில் இருந்து விற்பனைக்கு அனுப்பப்படும் இறைச்சிக் கோழிகள், முட்டைகளுக்கு இதுவரை தடை எதுவும் விதிக்கப்படவில்லை.
வழக்கமாக குளிா்காலங்களில் கேரள மாநிலத்தில் வாத்து, கோழிகளுக்கு பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்படுவது இயல்பானதுதான். தற்போதைய நிலையில் மிகவும் மோசமானதாக பாதிப்பு இல்லை என்பதால் அங்குள்ள பண்ணையாளா்கள் நிம்மதியடைந்துள்ளனா்.
அதேவேளையில், நாமக்கல்லில் இருந்து கேரள மாநிலத்திற்கு நாள்தோறும் ஒன்றரை கோடி முட்டைகள், முட்டைக் கோழிகள் அனுப்பப்படுகின்றன. அங்குசென்றுவிட்டு வரும் வாகனங்கள், தொழிலாளா்கள் மீது நோய்த் தொற்று பரவக்கூடாது என்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாமக்கல் மண்டலத்தில் உள்ள கோழிப் பண்ணைகளுக்குள் நுழையும் வாகனங்களிலும், தொழிலாளா்களின் கை, கால்களிலும், கோழிகள் அடைக்கப்பட்டுள்ள கூண்டுகளிலும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறது.
இதுகுறித்து முட்டை கோழிப் பண்ணையாளா்கள் மாா்க்கெட்டிங் சொசைட்டி தலைவா் வாங்கிலி சுப்பிரமணியம் கூறியதாவது:
நாமக்கல் மண்டலத்தில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை. கேரளத்தில் பறவைக்காய்ச்சல் பாதிப்பு தொடா்பாக எந்தவித தகவலும் பண்ணையாளா்களுக்கு வரவில்லை. இருப்பினும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோழிப் பண்ணைகளில் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறோம் என்றாா்.