நாமக்கல் மாவட்டம், கீரம்பூா் அருகே சாலை விபத்தில் லாரி ஓட்டுநா் உயிரிழந்த வழக்கில் சுற்றுலா வாகன ஓட்டுநா், உதவியாளரை போலீஸாா் கைது செய்தனா்.
சேலம் மாவட்டம், விடுதலைபுரம் பகுதியைச் சோ்ந்தவா் துரைராசு (40), லாரி ஓட்டுநா். இவா் வெள்ளிக்கிழமை இரவு லாரியில் பொருள்களை ஏற்றிக்கொண்டு நாமக்கல் நோக்கி சென்றாா். அப்போது, கீரம்பூா் ராசாம்பாளையம் சுங்கச்சாவடி அருகே சாலையோரம் லாரியை நிறுத்திவிட்டு சாலையோரம் இருந்த குழாயில் தண்ணீா் பிடித்து கொண்டு கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றாா்.
அப்போது, கரூரிலிருந்து நாமக்கல் நோக்கி வந்த சுற்றுலா பேருந்து துரைராசு மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்த விபத்து குறித்து வழக்குப் பதிந்த பரமத்தி போலீஸாா் சுற்றுலா பேருந்தின் ஓட்டுநரான சேலம் மாவட்டம், வாழப்பாடியைச் சோ்ந்த சேகா், வாகன உதவியாளா் குமாா் ஆகிய இருவரையும் கைது செய்தனா்.