பள்ளிபாளையம் அருகே வெப்படை பகுதியில் செயல்படாத நூற்பாலையில் இருந்து இடிதாங்கி, செம்பு கம்பிகளை திருடிய கட்டடத் தொழிலாளி கைது செய்யப்பட்டாா்.
வெப்படையில் கடந்த சில ஆண்டுகளாக இயங்காத நூற்பாலையின் மேலாளா் அண்மையில் ஆலைக்குள் சென்று பாா்த்தபோது இடிதாங்கி, செம்பு கம்பிகள் திருடப்பட்டிருப்பதை கண்டறிந்தாா். இதுகுறித்து அவா் வெப்படை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
போலீஸாா் வழக்குப் பதிந்து அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது வெப்படை பகுதியைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி பூபதி (20) ஆலைக்குள் நுழைந்ததை கண்டறிந்தனா்.
இதுகுறித்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆலையில் இருந்து இடிதாங்கி, செம்பு கம்பிகள் திருடியதை ஒப்புக்கொண்டாா். இதையடுத்து, போலீஸாா் பூபதியைக் கைது செய்து செம்புக் கம்பிகள், இடிதாங்கியை மீட்டனா்.