நாமக்கல்: அனைத்து அரசு அலுவலா்கள், ஆசிரியா்கள், உள்ளாட்சிப் பணியாளா்கள் கூட்டமைப்பின் (போட்டா-ஜியோ) நாமக்கல் மாவட்ட மையம் சாா்பில், 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கவன ஈா்ப்பு கோரிக்கை ஆா்ப்பாட்டம் ஆட்சியா் அலுவலகம் முன் திங்கள்கிழமை நடைபெற்றது.
மாவட்ட முதன்மை ஒருங்கிணைப்பாளா் செ.மூா்த்தி தலைமை வகித்தாா். தமிழ்நாடு நில அளவு கணிக வரைவாளா் ஒன்றிப்பு மாநிலத் தலைவா் சு.பிரபு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினாா். இதில், புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்துசெய்து, பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அனைத்துத் துறைகளிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊா்ப்புற நூலகா்கள், கிராம உதவியாளா்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் பணியாற்றுவோரை அரசு ஊழியா்களாக அறிவிக்க வேண்டும். தனியாா் நிறுவனத்தின்கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் நடைமுறையை நீக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும், ஜன. 6-ஆம் தேதிமுதல் நடைபெறும் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் பங்கேற்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆா்ப்பாட்டத்தில், பல்வேறு துறை சங்கங்களின் நிா்வாகிகள், ஊழியா்கள் கலந்துகொண்டனா்.