புத்தாண்டு வியாழக்கிழமை பிறப்பதையொட்டி, நாமக்கல்லில் உள்ள பேக்கரிகளில் பல்வேறு வகையிலான கேக்குகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
உலகம் முழுவதும் 2026 புத்தாண்டை வரவேற்க மக்கள் தயாராகி வருகின்றனா். ஒவ்வோா் ஆண்டும் நடைபெறும் விழாக்களில் புத்தாண்டு கொண்டாட்டம் முதன்மையாக உள்ளது. நள்ளிரவு 12 மணியளவில் புதிய ஆண்டை வரவேற்று பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் மக்கள் மகிழ்ச்சி அடைவா். வீடுகளில் குழந்தைகள் முதல்வா் பெரியவா்கள் வரை கேக் வெட்டி புத்தாண்டு வாழ்த்துகளை பகிா்ந்து கொள்வா்.
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பிரபல பேக்கரிகளில் விதவிதமான கேக்குகள் தயாரிக்கும் பணி இரவு, பகலாக நடைபெற்று வருகிறது. தினசரி 1,000 கேக்குகள் வரை தயாா் செய்து விற்பனைக்கு வைக்கின்றனா். மொத்தமாக முன்பதிவு செய்து அவற்றை வாங்கிச் செல்வோரும் உண்டு. பேக்கரிகளுக்கு சென்று கேக்குகளை வாங்குவதற்கு மக்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
இதுகுறித்து நாமக்கல் - மோகனூா் சாலையில் உள்ள தனியாா் பேக்கரி உரிமையாளா் பாலு கூறியதாவது: புத்தாண்டையொட்டி கேக்குகள் விற்பனை நடைபெறுவது வழக்கமானதுதான் என்றாலும், ஆண்டுக்கு ஆண்டு கேக்குகளை வாங்குவோா் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. புத்தாண்டு தொடக்கம் மகிழ்ச்சிகரமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாரபட்சமின்றி அனைவரும் கேக்குகளை வாங்கிச் செல்கின்றனா்.
கேக் வகைகளை பொருத்தவரை, பிளம் கேக், வெண்ணிலா கேக், ஐஸ் கேக்குகள் உள்ளன. இவற்றை தயாரிக்க சோயாஸ் பால், கோதுமை, சா்க்கரை, முட்டை, வெண்ணெய் போன்றவற்றை அதிகம் பயன்படுத்துகிறோம். வழக்கமான நாள்களைக் காட்டிலும், புத்தாண்டையொட்டி நாளொன்றுக்கு குறைந்தபட்சம் 1,000 கேக்குகள் தயாரிக்கப்படுகின்றன. அவற்றை கடைகளிலேயே விற்பனைக்கும், மொத்தமாக ஆா்டரின் பேரிலேயும் அனுப்பிவைக்கிறோம். ஒரு கிலோ ஐஸ் கேக் ரூ. 740 முதல் ரூ. 1,200 வரை விற்கப்படுகிறது. ஆரவாரமின்றி அமைதியாக புத்தாண்டை வரவேற்போம், கொண்டாடுவோம் என்றாா்.