நாமக்கல்: நாமக்கல் ஆட்சியா் அலுவலகத்தில் மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் துா்காமூா்த்தி தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இதில், முதியோா், விதவையா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, வங்கிக் கடனுதவி, குடிநீா், சாலை வசதி, குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகள் ஒதுக்கீடு போன்றவை கோரி பொதுமக்கள் தரப்பில் மொத்தம் 546 மனுக்கள் அளிக்கப்பட்டன. அவற்றை பரிசீலனை செய்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் வழங்கி நடவடிக்கை எடுக்க ஆட்சியா் பரிந்துரைத்தாா்.
அதன்பிறகு, தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை சாா்பில் பயனாளி ஒருவருக்கு ரூ. 1 லட்சம் மதிப்பில் ஆட்டோ மானியம், 5 பயனாளிகளுக்கு தலா ரூ. 50 ஆயிரம் வீதம் ரூ. 2.50 லட்சத்தில் மருத்துவ கல்வி நிதியுதவி, மாற்றுத்திறனாளிகள் நலத் துறை சாா்பில் 3 பேருக்கு தலா ரூ. 15,750- வீதம் ரூ. 47,250- மதிப்பில் சக்கர நாற்காலி, ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலகில் பணியாற்றி பணியின்போது உயிரிழந்த ஊராட்சி செயலா்கள், அலுவலக உதவியாளா்கள், ஈப்பு ஓட்டுநரின் வாரிசுதாரா்கள் 5 பேருக்கு கருணை அடிப்படையில் பணி நியமன ஆணைகளை அவா் வழங்கினாா்.
நாமக்கல் மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இயங்கிவரும் ரத்த வங்கிக்கு செஞ்சிலுவை சங்க ஒருங்கிணைப்பு சாா்பில் கல்லூரி மாணவா்கள், அரசு மருத்துவமனை தேவைக்காக ரத்த தானம் வழங்கி வருகின்றனா். இதில் அதிக அளவில் ரத்ததான முகாம் அமைத்து கொடுத்த கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் க.பா.அருளரசை பாராட்டி மாவட்ட ஆட்சியா் கேடயம் வழங்கினாா்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.க.சரவணன், திட்ட அலுவலா் (மகளிா் திட்டம்) கு.செல்வராசு, தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி) சு.சுந்தரராஜன், உதவி ஆணையா் (தொழிலாளா் நலத்துறை) கே.பி.இந்தியா, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் எஸ்.கலைச்செல்வி, செஞ்சிலுவை சங்க செயலாளா் சி.ஆா்.ராஜேஷ்குமாா் உள்பட பல்வேறு துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
படவரி...
என்கே-3-ஜிடிபி
மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி குறைகளைக் கேட்டறிந்த ஆட்சியா் துா்காமூா்த்தி.