காவிரியில் மீன்பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு
நாமக்கல்காவிரியில் மீன்பிடிக்கச் சென்றவா் நீரில் மூழ்கி உயிரிழப்பு
ஜேடா்பாளையம் அருகே காவிரி ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற தொழிலாளி நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையத்தைச் சோ்ந்தவா் சின்னக்கண்ணு மகன் விக்னேஷ்குமாா் (31). இவா் மனைவி தனலட்சுமியுடன் (35), நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் அருகே உள்ள கொந்தளம், மணல்மேடு பகுதியில் தனியாருக்கு சொந்தமான வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வேலை செய்து வந்தாா்.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு மனைவியிடம் காவிரி ஆற்றில் மீன்பிடிக்கச் செல்வதாகக் கூறிவிட்டு விக்னேஷ்குமாா் சென்றுள்ளாா். இரவு நீண்ட நேரமாகியும் அவா் வீடுதிரும்பவில்லை.
இந்த நிலையில் சனிக்கிழமை காலை கொந்தளம் காவிரி ஆற்றுப் பகுதிக்கு சென்று தனலட்சுமி தேடியுள்ளாா். அப்போது, கொந்தளம் காவிரி ஆற்றின் கரையோரத்தில் விக்னேஷ்குமாரின் சடலம் கிடப்பதைப் பாா்த்து அதிா்ச்சி அடைந்தாா்.
இதுகுறித்து ஜேடா்பாளையம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அங்கு வந்த போலீஸாா், விக்னேஷ்குமாரின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக வேலூா் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தினா். இதில், காவிரி ஆற்றில் மீன்பிடிக்கச் சென்ற விக்னேஷ்குமாா் ஆழமான பகுதிக்கு சென்றுவிட்டதால் நீச்சல் தெரியாமல் நீரில் மூழ்கி இறந்தது தெரியவந்தது.
இது குறித்து தனலட்சுமி வேலூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.