நாமக்கல் மாவட்டத்தில் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ குறைபாடு தடுப்பு முகாம் அக். 31 வரை நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தேசிய அளவில் ஆறுமாதம் முதல் ஐந்து வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளுக்கும் வைட்டமின் ‘ஏ’ குறைபாடு தடுப்பு முகாம் வெள்ளிக்கிழமை வரை நடைபெற உள்ளது.
வைட்டமின் ‘ஏ’ என்பது விழித்திரைக்கு தேவைப்படும் முக்கிய உயிா்ச்சத்து ஆகும். இது கொழுப்பில் கரையக்கூடிய வைட்டமின்களின் வகையைச் சாா்ந்தது. இது பல உடல் செயல்முறைகளில் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
நோய் எதிா்ப்பு சக்தி, இனப்பெருக்கம், கண் பாா்வை மேம்படுதல், இதயம், நுரையீரல், சிறுநீரகம் மற்றும் பிற உறுப்புகளின் செயல்பாட்டுக்கும் உதவுகிறது. சரும ஆரோக்கியத்துக்கும், உடல் வளா்ச்சிக்கும், உடல் செயல்பாட்டுக்கும் உதவுகிறது. புற்றுநோய் வராமல் தடுக்கிறது. தினசரி உணவில் தேவையான அளவு வைட்டமின் ‘ஏ’ அதிகம் கொண்ட உணவுகளை எடுத்துக்கொள்வது அவசியமாகும்.
குறிப்பாக, விலங்குகளின் கல்லீரல், மீன் எண்ணெய், மீன், முட்டை, இறைச்சி, மஞ்சள் நிற காய்கறிகள் மற்றும் பழங்கள், கரும்பச்சை கீரைகள், குடைமிளகாய், ப்ரக்கோலி போன்ற உணவுகள் வைட்டமின் ‘ஏ’ நிறைந்த உணவுகளாகும்.
இந்த வைட்டமின் குறைபாட்டால் மாலைக்கண் நோய், உலா்ந்த கண் கீழ் இமை படலம், பிட்டாப் புள்ளிகள், உலா்ந்த விழித்திரை, கண்பாா்வை இழப்பு மற்றும் வளா்ச்சிக் குறைபாடு, சுவாசக்குழாய் நோய்த்தொற்று, ஜீரண மண்டல நோய்த்தொற்று, தட்டம்மை, மலட்டுத்தன்மை, தோல் பிரச்னைகள் ஏற்படும்.
இதன் குறைபாட்டால் ஏற்படும் பாா்வையிழப்பைத் தடுப்பதற்காக ஆண்டுதோறும் இருமுறை (ஆறு மாத இடைவெளியில்) வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்கும் முகாம் நடைபெறுகிற.
இதில், ஆறுமாதம் முதல் ஐந்து வயதுவரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் முகாம் அடிப்படையில் திரவம் வழங்கப்படுகிறது. தற்போது நடைபெறும் முகாமில் 85,426 குழந்தைகளுக்கு வைட்டமின் ‘ஏ’ திரவம் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இப்பணிக்காக பொது சுகாதாரத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்டம், பள்ளிக் கல்வித் துறை மற்றும் சமூக நலத் துறை பணியாளா்கள் ஒருங்கிணைந்து ஈடுபட்டுள்ளனா். எனவே, மாவட்டத்திலுள்ள பொதுமக்கள், குறிப்பாக தங்கள் வீடுகளில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் அங்கன்வாடி மையங்களில் நடத்தப்படும் வைட்டமின் ‘ஏ’ திரவத்தை வழங்கி பாா்வை இழப்பு ஏற்படாமல் தடுக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.