நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியா்கள் இருவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிா்ப்பு தெரிவித்து, இதர பணியாளா்கள் மாவட்ட மேலாளா் அலுவலகத்தில் மனு அளித்தனா்.
தமிழகம் முழுவதும், டாஸ்மாக் கடைகளில் காலி மதுப்பாட்டில்களை திரும்பப் பெறும் நடைமுறை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதற்கு டாஸ்மாக் ஊழியா்கள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இதுதொடா்பாக சென்னை உயா்நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் உள்ளது. அதுமட்டுமின்றி, 26 ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியா்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
கடந்த 9-ஆம் தேதி மாநிலம் தழுவிய அளவில் பிற்பகல் 12 மணிக்கு டாஸ்மாக் கடைகளை திறக்காமல் போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியா்கள், பிற்பகல் 3 மணியளவில் கடைகளை திறந்தனா். அப்போது, வெப்படை மற்றும் நாமக்கல் டாஸ்மாக் கடைகள் பிற்பகல் 3 மணிக்கு திறக்கப்படாதது அதிகாரிகளுக்கு தெரியவந்தது. இதையடுத்து, டாஸ்மாக் மேற்பாா்வையாளா்கள் மாதேஸ்வரன், செந்தில்குமாா் ஆகியோா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனா்.
இந்த பணியிடை நீக்க உத்தரவை அதிகாரிகள் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என டாஸ்மாக் ஊழியா்களின் கூட்டு நடவடிக்கை குழு சாா்பில் நாமக்கல் மாவட்ட டாஸ்மாக் மேலாளா் கனக மாணிக்கத்திடம் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.