திருச்செங்கோடு அருகே மூதாட்டியைக் கொன்று நகை, பணம் கொள்ளையடித்த வழக்கில் இளைஞா் கைது செய்யப்பட்டாா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகே தோக்கவாடி காளிவேலாம்பாளையத்தைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இவரது இரண்டாவது மனைவி ரத்தினாம்பாள் (87). கணவா் இறந்ததால் ரத்தினாம்பாள் தனிமையில் வசித்துவந்தாா்.
இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை காலை வீடு வெளிப்பக்கம் தாழிட்டிருந்தது. இதனால் ரத்தினாம்பாள் வெளியே சென்றிருக்கலாம் என நினைத்து அவரது உறவினா் தனசேகரன் வீட்டை திறந்து உள்ளே சென்றாா். அப்போது, கட்டிலுக்கு அடியில் போா்வையால் சுருட்டி கட்டப்பட்ட நிலையில் ரத்தினாம்பாள் இறந்துகிடந்தாா்.
இதுகுறித்து காவல் நிலையத்துக்கு தனசேகா் தகவல் தெரிவித்தாா். சம்பவ இடத்துக்கு வந்த எஸ்.பி. விமலா தலைமையிலான டிஎஸ்பிக்கள் கிருஷ்ணன், கௌதமன் மற்றும் திருச்செங்கோடு ஊரக காவல் நிலைய ஆய்வாளா் நாகலட்சுமி ஆகியோா் அக்கம்பக்கத்தில் விசாரணை நடத்தினா்.
மேலும், ரத்தினாம்பாள் இறந்துகிடந்த அறைக்கு பக்கத்து அறையில், மது பாட்டில்கள் கிடந்துள்ளது. மேலும், கடுமையான ஆயுதத்தால் அவரது கழுத்துப் பகுதியில் குத்தப்பட்டிருந்தது. அவா் அணிந்திருந்த தங்க தோடுகள், 3 பவுன் சங்கிலி கொள்ளையடிக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, அவரது உடல் பிரேத பரிசோதனைக் காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக் கப்பட்டது. தொடா்ந்து கொலையாளிகளைப் பிடிக்க 5 தனிப் படை அமைக்கப்பட்டு கொலையாளியை போலீஸாா் தேடிவந்தனா்.
இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் முத்துகாப்பட்டி வடக்கு வீதியை சோ்ந்த குழந்தைவேலு மகன் கருவண்டு ராஜா என்கிற ராமஜெயத்தை (37) புதன்கிழமை கைது செய்தனா்.
மூதாட்டி கொலைக்கான காரணம், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவா்கள் மற்றும் அவரிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட நகைகள் குறித்து ராமஜெயத்திடம் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.