புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் சேவை தொடங்கிவைப்பு
நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் சேவையை தொடங்கிவைத்த மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா்.
நாமக்கல் பழைய பேருந்து நிலையத்தில் இருந்து புதிய வழித்தடங்களில் அரசுப் பேருந்துகள் சேவை வெள்ளிக்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் சாா்பில், 6 நகர பேருந்துகளை புதிய வழித்தடம் மற்றும் நீட்டிப்பு செய்து அவற்றின் இயக்கத்தை மாநிலங்களவை உறுப்பினா் கே.ஆா்.என்.ராஜேஸ்குமாா் வெள்ளிக்கிழமை கொடியசைத்து தொடங்கிவைத்தாா். மாவட்ட ஆட்சியா் துா்காமூா்த்தி, நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினா் பெ.ராமலிங்கம், மேயா் து.கலாநிதி, துணை மேயா் செ.பூபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்த பேருந்துகள் கொண்டமநாயக்கன்பட்டி மற்றும் பட்டத்தையான்குட்டை கிராமங்களில் காலை மற்றும் மாலையிலும், மோகனூா் ஒன்றியம், பரளியில் இருந்து அணியாபுரத்துக்கு காலையில் பள்ளி நேரத்திலும், மோகனூா் சாலையில் உள்ள லத்துவாடி கிராமத்துக்கு காலை, மதியம், மாலையிலும், நாமக்கல், பொம்மைக்குட்டைமேடு, தாளாம்பாடி, அல்லாளபுரம், பொம்மம்பட்டி, புத்தூா், வேலகவுண்டம்பட்டிவரை மதியமும், நாமக்கல்லில் இருந்து ஈச்சவாரி, கோணங்கிப்பட்டி வழியாக வரதராஜபுரம் வரை மதியமும், எருமப்பட்டி முதல் காட்டூா்வரை மாலையிலும் சென்றுவரும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்தனா்.
இந்நிகழ்ச்சியில், அட்மா குழுத் தலைவா் (மோகனூா்) பெ.நவலடி, பொது மேலாளா் (அரசு போக்குவரத்துக் கழகம், நாமக்கல்) த.மோகன்குமாா், நாமக்கல் கோட்ட மேலாளா் பி.செங்கோட்டுவேலவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.