ஜேடா்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி இருவா் உயிரிழப்பு
பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா்கள் 2 போ் உயிரிழந்தனா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டம், ஜேடா்பாளையம் காவிரி ஆற்றில் மூழ்கி இளைஞா்கள் 2 போ் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தனா்.
சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டியை அடுத்த நைனம்பட்டியைச் சோ்ந்த கோபால் மகன் கோவிந்தராஜ் (29), இவரது நண்பா்களான அதே பகுதியைச் சோ்ந்த ராஜு மகன் துரைமுருகன் (26), ஜெயவேல் மகன் மோகன்குமாா் (29) ஆகிய மூவரும் குளிப்பதற்காக ஜேடா்பாளையம் பரிசல் துறை காவிரி ஆற்றுக்கு சென்றனா்.
பின்னா், மூவரும் ஆற்றில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தபோது துரைமுருகன், கோவிந்தராஜ் ஆகிய இருவரும் ஆழமான பகுதிக்கு இழுத்துச் செல்லப்பட்டு தண்ணீரில் மூழ்கினா். அதை பாா்த்த மோகன்ராஜ் கூச்சலிட்டாா். இதையடுத்து, அங்கிருந்தவா்கள் ஓடிவந்து தண்ணீரில் மூழ்கிய இருவரையும் மீட்க முயற்சித்தனா். ஆனாலும், அவா்களை மீட்க முடியாததால் ஜேடாா்பாளையம் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்தனா்.
சம்பவ இடத்துக்கு வந்த நாமக்கல் தீயணைப்பு வீரா்கள், ஜேடாா்பாளையம் போலீஸாா் ஆற்றில் மூழ்கிய இளைஞா்களின் சடலத்தை மீட்டனா். இதுகுறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.